Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டிஜிட்டல் தான் எல்லாம்.. கூகுள் பே மூலம் லஞ்சம்.. கோவை வருவாய்த்துறை அடாவடி!!

Sekar July 06, 2022 & 13:33 [IST]
டிஜிட்டல் தான் எல்லாம்.. கூகுள் பே மூலம் லஞ்சம்.. கோவை வருவாய்த்துறை அடாவடி!!Representative Image.

நாடு முழுவதும் மத்திய அரசு தீவிரமாக டிஜிட்டல் இந்தியாவை முன்னெடுத்து வரும் நிலையில், ஊழலில் ஊறித் திளைத்துப் போன சில மாநில வருவாய்த்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதையும் டிஜிட்டல் மயமாக்கியுள்ளனர். கோவையில் தான் இந்த கூத்து நடக்கிறது.

தமிழகத்தின் தொழில்மயமான பகுதிகளில் கோவையும் ஒன்று. தொழில் மயம் காரணமாக பல்வேறு மாவட்ட மக்களும் இங்கு குடியேறுவது அதிகரித்து வருகிறது. இந்த குடியேற்றம் காரணமாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில் கொடிகட்டிப் பறக்கும் நிலையில், நிலம் வாங்க, விற்க மற்றும் பட்டா மாற்றம் போன்ற பணிகளுக்காக பொதுமக்கள் வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறையை நாடுவது அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் என்பது பல காலமாக இருப்பதாக பரவலாக பேசப்பட்டாலும், கோவையில் தற்போது தேவை அதிகரிப்பால் வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறையில் இது பன்மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் உச்சமாக லஞ்சத்தை கூகுள் பே மூலம் நேரடியாக அனுப்பச் சொல்லும் அளவுக்கு, கோவை மாவட்ட வருவாய்த்துறை டிஜிட்டல்மயமாக மாறிவிட்டதாக மக்கள் பலரும் புலம்பித்தள்ளுகின்றனர். மேலும் இதுதொடர்பாக உரிய ஆதாரங்களைக் கொண்டு புகார் அளித்தாலும், எந்த அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்காமல் அவர்களைக் காப்பாற்றுவதிலேயே, மூத்த அதிகாரிகள் குறியாக இருப்பதாக மக்கள் மேலும் புகார் கூறுகின்றனர்.

குறிப்பாக சிங்காநல்லுார் அருகே உள்ள உப்பிலிப்பாளையம் விஏஓ அலுவலகத்தில் தண்டல்காரராக பணியாற்றும் அருளானந்தம் என்பவர், பட்டா பெயர் மாற்றித்தருவதாகவும், பத்திர நகல்களை எடுத்துத்தருவதாகவும் கூறி, பலரிடம் கூகுள் பே மூலம் பணம் கறந்த தகவல் ஆதாரங்களுடன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பணத்தை வாங்கிக்கொள்ளும் அருளானந்தம் மக்களுக்கு எந்த வேலையையும் செய்து கொடுக்கவில்லை. இதில் நிர்மலா என்ற பெண் மிரட்டல் விடுத்ததை அடுத்து வாங்கிய ரூ.10 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் மீனாட்சி என்ற பெண்ணிடம், இரண்டு தவணையாக மொத்தம் ரூ.23,000 லஞ்சத்தை கூகுள் பே மூலமாக வாங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதுபற்றி அருளானந்தத்திடம் கேட்டபோது, அந்தப் பெண்ணுக்கு நாளை பத்திர நகல் வந்து விடும் இல்லையெனில் பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என பணம் வாங்கியதை ஒப்புக்கொள்ளும் வகையில் பேசியுள்ளார்.

மேலும் இது குறித்து கோவை தெற்கு தாசில்தார் சரண்யாவிடம் கேட்டதற்கு, ''மக்கள் பட்டா மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு யாருக்கும் லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை. அப்படி யாராவது பணம் கேட்பதாக புகார் வந்தால், உடனே நடவடிக்கை எடுக்கிறோம். சம்பந்தப்பட்ட உப்பிலிப்பாளையம் விஏஓ அலுவலக தண்டல்காரர் அருளானந்தம் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்.

இதற்கிடையே கோவை வருவாய்த்துறையில் லஞ்சம் தலைவிரித்தாடுவது குறித்து தமிழக அரசு நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்