படம் ரிலீசாகி 16 வருசம் ஆகிடிச்சாம். எனக்கு ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் இப்படி ஒரு படம் இருக்குன்றதே தெரியும். ஆமா.. நல்ல ஓட வேண்டிய படங்கள கண்டுக்காம நல்லா இல்லாத படங்களுக்கு போயி படம் நல்லா இல்ல மொக்கனு கமெண்ட்ல கழுவி ஊத்துற அந்த கேங்க்ல ஒருத்தன்தான் பேசுறேன். நா பேசப் போறது ஒரு டான் பத்தி.. இல்ல இல்ல கேங்க்ஸ்டர் பத்தி.. நீங்க நினைக்குறமாதிரி இவன் திடீர்னு நாலு பேர போட்டு பெருசா வளர்ந்த டான் இல்ல. இவன் ரத்தத்துலேயே ஊருன ஒரு விசயத்த படிப்படியா அவனே உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமா பெரிய ஆளா மாறின ஒருத்தன். அவன் பேரு கொக்கி குமாரு..
ஏன்டா நேரம் போகலனு படம் எடுத்துட்ருக்கீங்களாடா.. இப்படி பல பேரு கேள்விகள கேட்டுருப்பாங்க. இதுலாம் எதுக்கு நடிக்க வருதுனு முக கேலி கூட பண்ணிருக்க வாய்ப்புண்டு. ஆனா இன்னிக்கு கொக்கி குமார் கதாபாத்திரத்துல நடிச்ச தனுஷ் உலக அளவுல ஃபேமஸான ஹீரோ. தன்னோட தம்பிக்காக ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கித் தரணும்னு செல்வராகவன் நினச்சிருப்பாரோ என்னவோ தெரியல, அவருக்காக அடுத்தடுத்து பண்ண படங்கள்ல மாஸ்டர் பீஸ் இதுதான். புதுப்பேட்டை.
செல்வராகவன் யார்னு நமக்கும் தனுஷ் யார்னு செல்வராகவனுக்கும் காமிச்ச படம். அம்மான்னா யாருக்குதான் பிடிக்காதுனு டயலாக் பேசிட்டு உண்மையிலேயே அந்த அன்புக்காக ஏங்குற இடம் வேற லெவல்ல இருக்கும். தனுஷ் மட்டுமல்ல படத்தில் பாலாசிங், அழகம் பெருமாள் என கொஞ்சம் சீனியர் நடிகர்களும் சரி மற்ற ஜூனியர் நடிகர்களும் சரி அப்படியே கேங்ஸ்டராக வாழ்ந்திருப்பார்கள். நிஜ ரவுடி இப்படித்தான் இருப்பான். அவனுக்கு மிரட்டத்தான் தெரியும். அவனுக்குள்ளயும் ஒரு அன்புக்கான தேடல், ஏக்கம் இருக்கும். இத எல்லாத்தையும் கலந்து குடுத்த படம்தான் இது.
யுவன் ஏரியாவுல வேற யாரும் உள்ள வந்துட முடியுமா. வரியா என தொடங்கும் இசைப் பாடலை அப்போதே அறிமுகப்படுத்திவிட்டார். அது வேற மாதிரியான ரசனை நிறைந்த பாடல் காட்சி. எங்க ஏரியா உள்ள வராத பாடலும் சரி, நெருப்பு வாயினில் பாடலும் சரி ஏதோ புதுவித ஆல்பமாக அமைந்தது. வேறு மொழி வகை பாடலை தமிழில் தரத்துடன் கேட்டதுபோல ஒரு உணர்வு. இப்போதும் கேட்கத் தூண்டும் வகையில் அமைந்த ஒருநாளில் வாழ்க்கை, எப்போதெல்லாம் டிப்ரஸன் வருகிறதோ அப்போதெல்லாம் மனநல மருத்துவராய் காதுக்குள் கீதமாகிறது.
தமிழ் திரைப்படங்கள் ராவாக பார்க்கவேண்டும் என கேட்கும் யாருக்கும் நான் பரிந்துரைக்கும் முதல் படமாக மாறியதில் செல்வராகனின் பங்கு பெரியதா, தனுஷின் பங்கு பெரியதா என பட்டிமன்றமே நடத்தும் அளவுக்கு நானே குழம்பிப் போனதுதான் இதன் முடிவாக இருக்கும். முடிவற்ற முடிவு. எதற்கும் நீங்களும் ஒருமுறை பார்த்துவிட்டு முடிவுக்கு வர முடிகிறதா என பாருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…