Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கொலை: போலீசார் குவிப்பு..!

Baskarans Updated:
கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கொலை: போலீசார் குவிப்பு..!Representative Image.

கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை மர்மநபர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை அடுத்த தாழங்குடா மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (45). இவரது மனைவி சாந்தி (40). ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். மதியழகன் தனது குடும்பத்தினருடன் செம்மண்டலம் ஜெய்தேவ் நகர், புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் பகுதியில் வசித்து வந்தார். இன்று காலை மதியழகன் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு தனது வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் மதியழகன் அருகில் வந்தனர். அந்த நபர்கள் கையில் வீச்சரிவாளுடன் தன்னை கொலை செய்வதற்கு வருவதை அறிந்த மதியழகன், அங்கிருந்து வேகமாக ஓட தொடங்கினார்.

அந்த கும்பல் மதியழகனை துரத்தி சென்று சுற்றி வளைத்தனர். நடுரோட்டில் சரமாரியாக வெட்டினர். மதியழகன் முகத்தில் கடுமையாக வெட்டியதால் முகம் முழுவதும் சிதைந்து உருக்குலைந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கொலை செய்த கும்பல் மதியழகன் முகத்தில் வீச்சரிவாளை சொருகிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர்.

காலை நேரத்தில் நடுரோட்டில் ஒரு கும்பல் மதியழகனை கொலை செய்த சம்பவத்தை பார்த்து அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அலறியடித்துக் கொண்டு தெறித்து ஓடினார்கள். இத்தகவல் காட்டு தீ போல் பரவியதால் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

கொலை செய்த நபர்கள் 7-க்கும் மேற்பட்ட வீச்சரிவாள்களை சம்பவ இடத்தில் வீசி சென்றனர். தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சம்பவ இடத்தில் இருந்த அனைவரையும் உடனடியாக கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர்.

கொலை செய்யப்பட்ட மதியழகன் மனைவி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மற்றும் அவரது மகனுக்கும் தகவல் தெரிந்து அவர்கள் அங்கு வந்தனர். கொலை செய்யப்பட்டு சாலையில் கிடந்த மதியழகன் உடலை பார்த்து கதறி துடித்து அழுதனர்.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில், குண்டு உப்பலவாடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, தற்போது கொலை செய்யப்பட்டு இறந்த மதியழகன் மனைவி சாந்தியும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி தரப்பும் போட்டியிட்டனர். இதில் மதியழகன் மனைவி சாந்தி வெற்றி பெற்றார்.

அப்போது மாசிலாமணி தரப்பினர் மதியழகனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக தனது மனைவி ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் வெற்றி பெற்றாலும் நான் ஊருக்கு சென்றால் எனக்கு என்ன நேரிடுமோ என்ற அச்சத்தில் வாக்கு எண்ணும் மையத்திலேயே காலை முதல் இரவு வரை காத்திருந்தார்.

பின்னர் போலீசார் மதியழகனை பாதுகாப்பாக ஊருக்குள் கொண்டு சென்று இரு தரப்பினரையும் அழைத்து சரியான முறையில் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து வந்தனர். இருந்தபோதும் இவர்களுக்குள் தொடர்ந்து விரோதம் இருந்து வந்தது. கடந்த 2020-ம் ஆண்டு மாசிலாமணி தம்பி மதிவாணனை கண்டக்காடு பகுதியில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

தொடர்ந்து படகுகள், வலைகளை எரித்தும், வீடுகள் அடித்தும் நொறுக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் தற்போது கொலை செய்யப்பட்டு இறந்த மதியழகன் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர். கலவரத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மதியழகன் உள்ளிட்டவர்கள் ஜாமீனில் வெளியில் வந்தும் மீண்டும் தங்களது ஊருக்கு செல்லவில்லை. இதன் காரணமாக அனைவரும் தங்களது உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தங்கி வந்தனர் என்ற தகவல் போலீசாருக்கு தெரியவந்தது.

எனவே, தனது தம்பியை கொலை செய்த மதியழகனை மாசிலாமணி தரப்பினர் பழிக்குப்பழி வாங்க கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தனிப்படை போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் நடந்த இடத்திலும், தாழங்குடா கிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கொலை செய்த சம்பவம் மீனவ கிராமங்களில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்