Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முனியப்பன் அல்ல.. அது புத்தர் சிலை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

Sekar August 04, 2022 & 13:33 [IST]
முனியப்பன் அல்ல.. அது புத்தர் சிலை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!Representative Image.

சேலம் மாவட்டத்தில் உள்ள இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான ஒரு கோவிலில் தலைவெட்டி முனியப்பன் என வழிபாடும் சிலை உண்மையில் புத்தர் சிலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த இடத்தை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியேறி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் தலைவெட்டி முனியப்பன் கோவில் உள்ளது. இந்த சிலைக்கு இந்துக்கள் ஆடு, கோழி என பலியிட்டு வழிபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்த சிலை உண்மையில் புத்தர் சிலை என்றும் இது தங்களுக்குச் சொந்தமானது என்றும் இந்திய புத்த சங்கத்தினர் 2010இல் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய புத்த சங்கத்தின் சேலம் மாவட்ட அமைப்பாளர் ரங்கநாதன் என்பவர் 2011இல் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

ரங்கநாதன் தனது மனுவில், "சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட பெரியேரி எனும் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தில், தலைவெட்டி முனியப்பன் எனும் கோயில் உள்ளது. அங்குள்ள முனியப்பன் சிலைக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அந்த முனியப்பன் சிலை உண்மையில் புத்தர் சிலையாகும். இதுதொடர்பாக கடந்த 2008ல் சர்ச்சை உருவானது.

தலைவெட்டி முனியப்பன் எனக் கூறப்படும் சிலை அமர்ந்த நிலையில் கைகளை மடியில் வைத்தபடி உள்ளது. சிலை மட்டுமின்றி அங்குள்ள, 26 சென்ட் இடமும், புத்த சங்கத்துக்குச் சொந்தமானது. அந்த இடத்தை மீட்டு மீண்டும் புத்த சங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் எனக்கோரி, இந்து சமய அறநிலையத் துறைக்கும், முதல்வர் தனிப்பிரிவுக்கும் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை." எனக் கூறி மீட்டுத் தருமாறு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அது உண்மையில் தலைவெட்டி முனியப்பன் சிலையா அல்லது புத்தர் சிலையா என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, தமிழக தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக தொல்லியல் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் தமிழக தொல்லியல் துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், சிலை புத்தருக்கான அனைத்து அடையாளங்களையும் கொண்டுள்ளன. இது அர்த்தபத்மாசனம் நிலையில் இருக்கும் புத்தர் சிலை என உறுதி செய்தது.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், இது தலைவெட்டி முனியப்பன் சிலை எனக்கருதி பக்தர்கள் வழிபாடு நடத்தி வருவதால், இந்து சமய அறநிலையத் துறை வசமே சிலை மற்றும் இடம் தொடர அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார்.

ஆனால் இதை ஏற்காத நீதிமன்றம், "பெரியேரியில் இருப்பது புத்தர் சிலைதான் என்பதை தொல்லியல் துறை தெளிவாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால், அதை தலைவெட்டி முனியப்பன் சிலை என்பதை இந்து சமய அறநிலையத் துறை கருத அனுமதிக்க முடியாது.

புத்தர் சிலை உள்ள இடத்தை தமிழக தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். மேலும் அங்கு இருப்பது புத்தர் சிலை தான் என அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். மேலும் அந்த இடத்தில் பொது மக்களை அனுமதிக்கலாம். ஆனால், புத்தர் சிலைக்கு பூஜை செய்ய தொல்லியல் துறை அனுமதிக்கக் கூடாது." என உத்தரவிட்டுள்ளது.

இதனால் தலைவெட்டி முனியப்பனாக அதற்கு இத்தனை காலம் பூஜை செய்து வழிபட்டு வந்த இந்துக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்