Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திருப்பூர் அருகே பாஜக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி - வைரலாகும் வீடியோ!

Baskaran Updated:
திருப்பூர் அருகே பாஜக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி - வைரலாகும் வீடியோ!Representative Image.

திருப்பூர்: பல்லடம் அருகே பொங்கலூரில் மக்கள் பயன்பாட்டில் இருந்த கழிவுநீர் கால்வாயை மூட வந்த திமுக கவுன்சிலரின் தம்பியை தட்டி கேட்ட பாஜக நிர்வாகி மீது ஜேசிபி ஏற்றி கொல்ல முயற்சித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூரில் வசித்து வருபவர் செல்வகுமார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் OBC மண்டல தலைவராக உள்ளார்.இவரது வீட்டிற்கு அருகே பொங்கலூர் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் கடந்த 11 வருடங்களாக உள்ளது. இதே பகுதியில் பொங்கலூர் ஊராட்சி துணை தலைவர் ராதாகிருஷ்ணன் என்பவரின் உறவினர் வீடும் உள்ளதாக கூறப்படுகிறது.

பொங்கலூர் ஊராட்சி துணை தலைவரின் உறவினர் வீட்டிற்கு அருகிலேயே கழிவுநீர் கால்வாய் உள்ளதால் அதை மூடுவதற்காக கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பொங்கலூர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாதப்பூரை சேர்ந்த திமுக கவுன்சிலர் லோகு என்பவரின் தம்பி கதிரவன் அவருக்கு சொந்தமான ஜேசிபியை கொண்டு வந்துள்ளார். 11 வருடங்களாக மக்கள் பயன்பாட்டில் உள்ள கழிவு நீர் கால்வாயை மூட எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஜேசிபி வாகனத்தை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அப்பகுதி மக்கள் யாரும் இல்லாத சமயத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மீண்டும் திமுக கவுன்சிலரின் தம்பி கதிரவன் கழிவுநீர் கால்வாயை மூடுவதற்காக ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வந்துள்ளார். அங்கு வந்த பாஜக நிர்வாகி செல்வகுமார் கழிவுநீர் கால்வாயை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கதிரவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஜே சி பி இயந்திரத்தின் முன்பு நின்று கொண்டு கழிவுநீர் கால்வாயை மூடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த ஜேசிபி ஓட்டுநர் வசந்தகுமார் மற்றும் திமுக கவுன்சிலர் லோகு என்பவரின் சகோதரர் கதிரவன் ஆகியோர் செல்வகுமார் மீது ஜேசிபி ஏற்றி சிறிது தூரம் தள்ளிக் கொண்டே சென்றுள்ளார்.

இதில் காயமடைந்த செல்வகுமார் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் மற்றும் அவிநாசிபாளையம் காவல்துறையினர் உண்மை தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள் கூறுகையில், பொங்கலூர் ஊராட்சி துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் என்பவரின் உறவினர் வீட்டிற்கு அருகிலேயே இந்த கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளதாகவும் அதை அடைத்து வைத்துக் கொண்டு துணைத் தலைவரின் உறவினர்கள் பிரச்சனையில் ஈடுபட்டதால் கழிவுநீர் கால்வாயை சீரமைத்து தரக்கோரி ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், இன்று கழிவுநீர் கால்வாயை முழுவதுமாக மூடுவதற்கு வந்த ஜேசிபி இயந்திரத்தை தடுத்தபோது செல்வகுமார் மீது ஜேசிபி ஏற்றி கொள்ள முயன்றதாகவும் செல்வகுமார் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இதில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் மற்றும் ஜேசிபி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜேசிபி ஓட்டுநர் வசந்தகுமார் மற்றும் திமுக கவுன்சிலர் லோகு என்பவரின் சகோதரர் கதிரவன் ஆகியோர் தங்களை பொதுமக்கள் தாக்கியதாக கூறி பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜேசிபி உரிமையாளர் திமுக கவுன்சிலர் லோகு, அவரது தம்பி கதிரவன், ஜேசிபி ஓட்டுநர் வசந்தகுமார், பொங்கலூர் ஊராட்சி துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன்,இணை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி நாராயணன் ஆகியோர் மீது செல்வகுமாரின் உறவினர்கள் அவிநாசி பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்