Sat ,Jun 22, 2024

சென்செக்ஸ் 77,209.90
-269.03sensex(-0.35%)
நிஃப்டி23,501.10
-65.90sensex(-0.28%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் ரவுடிகளுக்கு எதிராக நடவடிக்கை: புதிய டிஜிபி சங்கர் ஜிவால் நம்பிக்கை

Baskarans Updated:
தமிழகத்தில் ரவுடிகளுக்கு எதிராக நடவடிக்கை: புதிய டிஜிபி சங்கர் ஜிவால் நம்பிக்கை Representative Image.

சென்னை: தமிழகத்தில் ரவுடிகளுக்கு எதிராகவும் கள்ளச்சாரத்துக்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2 ஆண்டுகள் சைலேந்திரபாபு திறம்பட பணியாற்றி வந்தார். அவர் இன்று பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டு உள்ளார்.  சென்னையின் 108-வது போலீஸ் கமிஷனராக 2021-ம் ஆண்டு சங்கர் ஜிவால் பதவியேற்றார். இப்பணியில் 2 ஆண்டுகள் சிறந்து விளங்கினார்.

அதே நேரத்தில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு வாரந்தோறும் ரொக்க பரிசு மற்றும் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டவும் செய்வார். மாதந்தோறும் பணியில் சிறந்து விளங்கிய ஒருவரை தேர்வு செய்து அவருக்கு நட்சத்திர போலீஸ் விருதையும் வழங்கி வந்தார்.

சங்கர் ஜிவால் சென்னை காவல்துறையை தற்கால நவீன உலகத்துக்கு அழைத்து சென்றார். சிற்பி, அவள், பறவை, மகிழ்ச்சி, ஆனந்தம், காக்கும் காவல் கரங்கள் போன்ற சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வந்தார். சென்னையில் முத்திரை பதித்த இவர் தமிழ்நாடு முழுவதும் தனது சிறப்பு முத்திரையை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். 1990-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தமிழக போலீஸ் துறையில் பணியில் சேர்ந்தார். மன்னார்குடி, சேலம் ஊரகப் பகுதி போன்ற இடங்களில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். சேலம், மதுரை உள்பட மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக சிறப்பாக பணியாற்றினார்.

இவர் 'கியூ' பிரிவிலும் பணியாற்றி முத்திரை பதித்தார். 2 ஆண்டுகள் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவின் தென் மண்டல இயக்குனராகவும் திறம்பட பணியாற்றியவர். அந்த கால கட்டத்தில் அதிகளவில் 'ஹெராயின்' போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சந்தன கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட ஈரோடு சத்தியமங்கலம் சிறப்பு அதிரடி காவல் படையில் 6 ஆண்டுகள் பணியாற்றியவர்.

திருச்சி போலீஸ் கமிஷனராகவும், உளவுப்பிரிவில் டி.ஐ.ஜி., ஐ.ஜி.யாகவும் பணி செய்துள்ளார். இவரது சிறந்த காவல் பணியை பாராட்டி கவுரவிக்கும் விதமாக இவருக்கு கடந்த 2007, 2019-ம் ஆண்டுகளில் ஜனாதிபதி விருது கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் 31-வது புதிய சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் இன்று பிற்பகல் சென்னை மெரினாவில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டார்.

இதனையடுத்து இன்று ஓய்வுபெறும் டி.ஜி.பி.சைலேந்திரபாபு, புதிய டி.ஜி.பி. சங்கர் ஜிவாலிடம் பொறுப்புகளை ஒப்படைத்து, வாழ்த்துக்களை தெரிவித்தார்.  இன்று மாலையில் சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம் விளையாட்டு மைதானத்தில் சைலேந்திரபாபுக்கு வழி அனுப்பு விழா நடைபெறுகிறது.

மேலும் ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு பாரம்பரிய முறையில் ரோப் புல்லிங் என்ற அடிப்படையில் மரியாதை செலுத்தப்பட்டது. காரில் சைலேந்திரபாபு மற்றும் அவரது மனைவியை அமர வைத்து, ஏடிஜிபி மற்றும் ஐஜி அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.

முன்னதாக அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சங்கர் ஜிவால், தமிழக முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ரவுடிகளுக்கு எதிராகவும் கள்ளச்சாராயத்திற்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டம் இருப்பதாகவும் அதே நேரத்தில் காவலர்கள் நலன் குறித்தும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்றைய தேதியில் மாநில சட்ட ஒழுங்கு சீராக இருப்பதாகவும், இதைத் தொடர்ந்து சீராக வைத்திருப்பதற்கு தொழில்நுட்ப மேம்பாட்டின் அடிப்படையிலும், போதிய காவல்துறையினரை பயன்படுத்தியும், காவலர் மற்றும் பொதுமக்களுடைய நல்லுறவை ஏற்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். காவல்துறையினர் தங்கள் பணியை மேற்கொண்டு வருவதாகவும் எதிர்காலத்தில் மனிதநேயத்துடன் சேர்த்து காவல்துறை பணியை மேம்படுத்த  முயற்சி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் புகார் உடன் வரும்போது காவல் நிலையத்தில் முறையாக கையாள வேண்டும் எனவும், எல்லா காவல் நிலையத்திலும் வரவேற்பு பிரிவு அமைக்கப்பட்டு வருவதாகவும், காவலர்கள் நலம் என்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்பட உள்ளதாகவும், அதன் அடிப்படையில் அவர்களுக்கு என விடுமுறை மருத்துவ வசதி மற்றும் வீட்டு வசதி ஆகியவற்றை சிறப்பாக செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சாலை விபத்துகளை குறைப்பதற்கு ஹாட்ஸ்பாட் பகுதிகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சாலை விபத்துகளில் மரணங்களை குறைக்கவும் நடவடிக்கையும் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறியுள்ளார். முதலமைச்சர் கூறியபடி ,சென்னையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு தொழில்நுட்ப மேம்பாட்டு வசதிகளை மற்ற மாவட்டங்களிலும் கொண்டு வருவதற்கும் முயற்சி எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக ஆன்லைன் மூலமாக புகார்கள் பெறப்பட்டு அது எந்த நிலையில் உள்ளது என்பதை பார்ப்பதற்கும் தொழில்நுட்பம் மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். முதலமைச்சர் மற்றும் அரசாங்கம் எதிர்பார்க்க முடியும் செயல்பட உள்ளதாக தெரிவித்தார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்