Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அரசியலில் சினிமாக்காரர்கள்..! தமிழகத்தின் சாபக்கேடு..!! _ விசிக தலைவர் திருமாவளவன் சாடல்..!

Saraswathi Updated:
அரசியலில் சினிமாக்காரர்கள்..! தமிழகத்தின் சாபக்கேடு..!! _ விசிக தலைவர் திருமாவளவன் சாடல்..!Representative Image.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் சினிமா மூலம் கிடைத்த பிரபலத்தைக் கொண்டே முதலமைச்சராகிவிடலாம் என நினைப்பதாகவும், இந்த சாபக்கேடு தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சாடியுள்ளார். 

தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என். ரவியை அகற்றக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக,  சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்திற்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை.வைகோ வந்து, திருமாவளவனிடம் கையெழுத்துப் பெற்றார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். பெரியார் அம்பேத்கர் போன்ற மாமனிதர்கள் பெயரைக்கூட உச்சரிக்க கூச்சப்படுகிறார். சமூக நீதி சமத்துவம் என்ற சொற்களையும் உச்சரிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். ஒரு சனாதன பிற்போக்குவாதி, தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது வருத்தம் அளிக்கிறது. அவரை திரும்ப பெற வேண்டும் என்ற குரல் தமிழ்நாட்டில் ஓங்கி ஒலிக்க துவங்கிவிட்டது

அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, பெரும்பான்மை மக்களும் ஆளுநரின் போக்கை கண்டிக்கிறார்கள்.  அவர் பதவி விலக வேண்டும் அல்லது பதவியில் இருந்து அவரை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது முன்வைக்கிறார்கள். அந்த வகையில், ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வைப்பதற்காக மதிமுக துவங்கியிருக்கும் இந்த கையெழுத்து இயக்கம் வரவேற்கத்தக்கது. 

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, நடிகர் விஜயின் சமீபத்திய பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன்,  விஜய் அரசியலுக்கு வரட்டும். அதனால் ஒன்றுமில்லை. நல்ல எண்ணத்தின் அடிப்படையில் அம்பேத்கர் பெரியார் போன்ற தலைவர்கள் பற்றி படிக்க வேண்டும் என கூறி உள்ளார். அதனை வரவேற்கிறோம். பொது வாழ்வுக்கு எப்போது வேண்டும் என்றாலும் வரலாம். மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வர வேண்டும். பொதுவாக சினிமாவில் இருந்து வரும் நபர்கள் சினிமா மூலம் கிடைத்த பிரபலம் இருந்தால்போதும், முதல்வர் ஆகி விடலாம் என நினைக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் தான் இந்த சாபக்கேடு உள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில்  சினிமாவில் உள்ள நபர்கள், அவர்கள் வேலையை பார்க்கின்றனர். தமிழகத்தில் மட்டும்தான் எல்லா வேலையும் முடிந்து, அரசியலுக்கு வந்து மக்களை கவர்ந்து விடலாம் என நினைக்கின்றனர்.

முற்போக்கான கருத்தியல் சார்ந்து களப்பணி ஆற்ற வேண்டும். அதுதான் தமிழகத்தின் தேவையாக உள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கடைசி காலகட்டத்தில் சினிமா நடிகர்கள் ஆட்சிக்கு வரலாம் என்று கணக்கு போடுவதில்லை. கேரளாவில் மம்முட்டி, கர்நாடகாவில் ராஜ்குமார், தேசிய அளவில் பிரபலமான அமிதாப்பச்சன் என பலர் இதனை செய்யவில்லை.

எம்ஜிஆர், என்.டி.ஆர் போன்றோர் அதில் விதிவிலக்கு. அதேஅடிப்படையில் அனைவரும் வந்துவிட முடியாது. அது மாதிரி தமிழகத்தில் வந்தவர்கள் எல்லாம் பின்னுக்கு சென்று விட்டனர். மக்களுக்கு பணியாற்றி சிறைக்கு சென்றவர்கள், தியாகம் செய்தவர்கள் என அனைவரையும் ஓரம் கட்டி ஹைஜாக் பணி விடலாம், சினிமா மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து மக்களை ஹைஜாக் செய்துவிடலாம் என்ற எண்ணம் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது என்றார். 

 இதற்கு முன்பு திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த அனைவருக்குமே இது பொருந்தும். திரைத்துறையில் இருப்பவர்கள் இதுவரை சம்பாதித்துவிட்டோம். இனி ஆட்சியில் உட்காரலாம் என்று கணக்கு போட்டு அரசியலுக்கு வருகிறார்கள் என்று சாடினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்