Sat ,Apr 13, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

சிறுத்தையா சிவிங்கையா..? குழப்பமும் விளக்கமும்!!

Sekar September 17, 2022 & 12:50 [IST]
சிறுத்தையா சிவிங்கையா..? குழப்பமும் விளக்கமும்!!Representative Image.

இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கை புலி இனத்தை மீண்டும் மீட்டெடுக்கும் வகையில் , ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து 8 சிவிங்கை புலிகள் கொண்டு வரப்பட்டு, மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவிடப்பட்டது.

இந்தியாவில் சிறுத்தைப் புலிகள் இனம் முற்றிலுமாக அழிந்த நிலையில், 74 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்பிரிக்க நாட்டில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தியாவில் சிறுத்தைப் புலிகள் அழிந்துவிட்டிருந்தால், அவ்வப்போது சத்தியமங்கலம் பகுதிகளில் சிறுத்தை புலிகள் ஊருக்குள் வருவதாக வெளியாகும் செய்திகள் பொய்யா?

உண்மையில், இந்தியாவில் சிறுத்தைப் புலிகள் (Leopard) இனம் அழியவில்லை. தற்போது நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள சிவிங்கை புலியை (Cheetah) சிறுத்தைப் புலி என்று கூறினாலும் அவை இரண்டும் இரண்டும் வேறு வேறு. இந்த சிவிங்கை புலியை சிலர் வேங்கை புலி என்றும் அழைப்பர்.

இந்தியாவில் சிவிங்கை புலிகள் இனத்தின் கடைசி சிவிங்கை 1949 ஆம் ஆண்டு சத்திஸ்கர் கோரியா பூங்காவில் இறந்த நிலையில், இந்த வகை இனம் இந்தியாவில் முற்றிலுமாக அழிந்து விட்டது. அதன் பின்னர் நமீபியாவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தற்போது ஐந்து பெண் மற்றும் 3 ஆண் சிவிங்கைகள் இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளன.

சரி சிறுத்தையையும், சிவிகையையும் எப்படி வேறுபடுத்தி பார்ப்பது? தொடர்ந்து படியுங்கள்.

சிவிங்கைப் புலி

மஞ்சள் கலந்த பழுப்பு நிற தோல் கொண்ட சிவிங்கை புலிகளின் உடம்பில் உள்ள புள்ளிகள் கறுப்பு நிறத்திலும் வட்ட வடிவிலும் இருக்கும். மேலும் இவை வட்ட முகம் கொண்டவை. இவற்றின் கண்களில் இருந்து வாய்ப்பகுதி வரை கண்ணீர்க் கோடு போன்ற கறுப்புக் கோடு இடம் பெற்று இருக்கும்.

இவை மெலிந்த உடலமைப்பும், நீண்ட கால்களும் கொண்டவை மற்றும் மிக வேகமாக ஓடக்கூடியவை. ஓட்டத்தில் சிவிங்கையை மிஞ்சக்கூடிய விலங்குகள் எதுவும் இல்லை.

இவை வழக்கமாக பகலில்தான் வேட்டையாடும். இவை பாதங்களை உள்ளிழுக்கும் அமைப்பை கொண்டிராததால், இவற்றால் சிறுத்தையைப் போல் மரங்களில் ஏற முடியாது.

பொதுவாக 80 பவுண்டுக்கும் குறைவான எடை கொண்ட பாலூட்டிகளை வேட்டையாடிச் சாப்பிடும். சிறு மான், ஆப்ரிக்கச் சிறு மான் போன்றவற்றை வேட்டையாடி உண்ணும் இவை, குழுவாக வேட்டையாடும்போது வரிக்குதிரை போன்ற பெரிய விலங்குகளையும் சாய்த்து விடும் திறன் கொண்டவை. பொதுவாக 8 முதல் 10 வருடங்கள் வரை உயிர் வாழும். மேலும் இவற்றின் குட்டிகள் தாயிடம் 3 மாதங்கள் வரை மட்டுமே வளரும், பின்னர் சுயமாக செயல்பட ஆரம்பித்து விடும்.

சிறுத்தை

இவை சிவிங்கையை போல் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் இல்லாமல், பெரும்பாலும் மஞ்சள் நிறத் தோலையே கொண்டிருக்கும். சிவிங்கையை போல் இவற்றின் உடம்பிலும் கறுப்பு நிற வளையங்கள் இருக்கும். ஆனால் அவை முழு வட்ட வடிவமாக இல்லாமல், ஆங்காங்கே உடைந்து இடைவெளியுடன் இருக்கும். மேலும் அந்த வட்டத்தின் நடுவில் அடர்த்தியான பழுப்பு நிறம் இருக்கும்.

உறுதியான மற்றும் படர்ந்த முகம் கொண்ட சிறுத்தைகள் உறுதியான, பருத்த உடலுடனும் குட்டையான கால்களுடனும் இருக்கும். இவை ஓட்டத்தில் இவை சிவிங்கைகளைவிட வேகம் குறைவானவை.

மேலும் சிவிங்கைகளை போல் அல்லாமல் இரவில் வேட்டையாடும். சிறுத்தைப் புலிகளிடம் இன்னொரு வித்தியாச குணமும் உண்டு. இவை தாங்கள் வேட்டையாடிய இரையை மரத்தின் உச்சிக்குக் கொண்டு சென்று அங்கு வைத்தே சாப்பிடும்.

இவற்றின் பாதங்கள் பூனையின் பாதங்களைப் போல உள்ளிழுக்கும் அமைப்பு கொண்டவை என்பதால், எளிதாக மரங்களில் ஏறும் திறன் கொண்டவை.

மேலும் இவை பெரிய சாண வண்டுகளில் தொடங்கி எருது போலப் பெரியதாக இருக்கும் மான் போன்ற பெரிய விலங்குகள் வரை அனைத்தையும் வேட்டையாடி உண்ணும். 12 முதல் 17 ஆண்டுகள் வரை வாழும் சிறுத்தை புலிகளின் குட்டிகள், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை அம்மாவிடம் வளரும்.

இதைத் தவிர்த்து சுவாரஸ்யமான விஷயமும் ஒன்று உள்ளது. அது என்னவெனில், இந்தியாவில் கடந்த காலங்களில் நாய், பூனை போல இந்த சிவிங்கை புலிகளும் வளர்ப்பு விலங்குகளாக பழக்கப்படுத்தப்பட்டு, காட்டில் இதர விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தி வந்துள்ளனர் நம் முன்னோர்கள் என்பது தான்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்