Tue ,Apr 30, 2024

சென்செக்ஸ் 74,668.04
937.88sensex(1.27%)
நிஃப்டி22,643.40
223.45sensex(1.00%)
USD
81.57
Exclusive

தொன்மை மாறாமல் அம்மணி அம்மாள் மடத்தை புதுப்பிக்க அரசுக்கு உத்தரவு

Chandrasekar Updated:
தொன்மை மாறாமல் அம்மணி அம்மாள் மடத்தை புதுப்பிக்க அரசுக்கு உத்தரவு Representative Image.

திருவண்ணாமலையில் உள்ள அம்மணி அம்மாள் மடம் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், அதன் தொன்மை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 

திருவண்ணாமலையை சேர்ந்த சிவபாபு என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், ஜவ்வாது மலை அருகே உள்ள சின்னசமுத்திரம் கிராமத்தில் பிறந்த அம்மணி அம்மாள் பெற்றோரின் விருப்பத்திற்காக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இல்லற வாழ்க்கையில் இருந்து விலகி துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். பின்னர், திருவண்ணாமலைக்கு வந்த அம்மணி அம்மாள் தீர்க்க முடியாத பல நோய்களை "திருநீறு" கொடுத்து தீர்த்ததாக கூறப்படுகிறது. 

திருவண்ணாமலை ஆலயத்திற்கு அருகே இருந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்ட அம்மணி அம்மாள் கோவிலின் வடக்கு கோபுரத்தை மைசூர் மகாராஜா உதவியுடன் நன்கொடை மற்றும் பிச்சையின் மூலம் நிதி திரட்டி கட்டினார். இதனால் அந்த கோபுரம் அம்மணி அம்மாள் கோபுரம் என அழைக்கப்படுகிறது. கோபுரம் கட்டுவதற்கான பொருட்களை சேர்த்து வைக்க பயன்பட்ட 25,247 சதுர அடி நிலத்தில் பக்தர்களுக்கு அன்னதானமும், சேவையும் வழங்கப்பட்டது. அம்மணி அம்மாள் நினைவாக செயல்பட்டு வந்த மடத்தை டி.ஏ வையாபுரிக்கு பிறகு அவரது குடும்பத்தினர் நிர்வாகிக்காததால், சின்னதம்பி பிள்ளை என்பவர் ஆக்கிரமித்து உரிமை கோரினார். 

இதை எதிர்த்து 2002ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்த இடத்தை வையாபுரி குடும்பத்தினருடன் சேர்ந்து அறநிலையத்துறை நிர்வகிக்க உத்தரவிட்டது. ஆனால் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க தவறியதால், ஆக்கிரமிப்பாளர்களை அகற்றக்கோரி 2015 ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. ஆனால், ஆக்கிரமிப்பாளர்களை அகற்றாமல் 300 ஆண்டுகள் பழமையான அம்மணி அம்மாள் மடத்தை இடித்துள்ளனர். அதனால் இடிக்கப்பட்ட மடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை சார்பில், ஆக்கிரமிப்பை இடிக்கும் பணிகள் நிருத்தப்பட்டுள்ளதாகவும், இடிக்கப்பட்ட மடத்தின் மற்ற பகுதிகள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நீதிமன்ற உத்தரவின் படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை மட்டும் அகற்றாமல், பழமையான மடத்தையும் இடத்ததற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவி அம்மணி அம்மாளின் நினைவுச்சின்னமான மடத்தை அதன் பழமை மாறாமல் விரைவில் புதுப்பிக்க வேண்டும் எனவும் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்