Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திருவாரூரில் இன்று கலைஞர் கோட்டம் திறப்பு..! பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்பு..!!

Saraswathi Updated:
திருவாரூரில் இன்று கலைஞர் கோட்டம் திறப்பு..! பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்பு..!!Representative Image.

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருவாரூரில் ஆழித்தேர் வடிவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தின் திறப்பு விழா இன்று மாலை நடைபெறுகிறது. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் விழாவில் கலந்துகொண்டு, கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைக்கிறார். 

திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு முழுவதும் திமுகவால் கொண்டாடப்படவுள்ளது. கடந்த 3ம் தேதி முதல் கலைஞரின் நூறாவது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் பல்வேறு மாவட்டங்களிலும் நடத்தப்பட்டுவருகிறது.  

இதன் ஒரு பகுதியாக, கருணாநிதியின் நினைவாக திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் பிரம்மாண்டமான முறையில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. ஏழாயிரம் சதுரஅடி பரப்பளவில்  12 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கலைஞர் கோட்டத்தில் கருணாநிதி சிலை, முத்துவேலர் நூலகம், கருணாநிதியின் நினைவுகளை போற்றக்கூடிய பழைய புகைப்படங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.  இவற்றோடு 2 திருமண மண்டபங்களும் அங்கு கட்டப்பட்டுள்ளன.

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரின் சிறப்பை குறிக்கும் வகையில், கலைஞர் கோட்டமும் ஆழித்தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.  இதன் திறப்பு விழா இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பீகார் முதலமைச்சர்  நிதிஷ்குமார் கலந்து கொண்டு கலைஞர் கோட்டத்தை திறந்துவைக்கிறார். அதைத் தொடர்ந்து, முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் திறந்துவைக்கவுள்ளார். 

அங்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி உருவச்சிலையை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த விழாவையொட்டி, நேற்று முன்தினமே விமானம் மூலம் திருச்சி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் கார் மூலம் திருவாரூர் சென்று, சன்னதி தெருவில் உள்ள தமது இல்லத்தில் தங்கியுள்ளார்.  

நேற்று கலைஞர் கோட்டத்திற்குச் சென்ற முதலமைச்சர் திறப்பு விழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தல்,  விழா மேடை உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மதிவாணன் மற்றும் திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.  
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்