அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் மிகவும் முக்கியமானது தக்காளி. இந்த தக்காளி இல்லாமல் குழம்பு வைப்பது சற்று சவாலான காரியம். எந்த குழம்பாக இருந்தாலும் ஒரு தக்காளியையாவது சேர்த்து சமைத்தால் தான் அந்த குழம்பிற்கு உண்டான சுவையே கிடைக்கிறது. அதனால் தான் நம் அம்மாக்கள் வீட்டில் தக்காளி இல்லையென்றால், பக்கத்துவீட்டில் தக்காளியை கடன் வாங்கியாவது சமைப்பார்கள். நாம் இவ்வளவு நாட்களாக தக்காளி என்பது ஒரு காய்கறி வகையை சேர்ந்தது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் தக்காளி ஒரு பழவகை. அந்த காலத்தில் பழவகைகள் என்றால் வரி உண்டு. தக்காளி அதிகளவில் பயன்படுத்துவதால் இதை காய்கறி வகைகளில் சேர்த்துக் கொண்டார்கள்.
சுமார் 400 ஆண்டுகளாக தான் தக்காளி உணவுக்கு அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு பொருள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்றால் விலை அதற்கேற்ப தான் இருக்கும். ஒரு காலத்தில் 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கொடுமையும் இருக்கிறது. அதுவே, மழைக்காலத்தில் தக்காளியின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு எகிறிக்கொண்டே செல்லும். அப்படியாப்பட்ட சூழ்நிலை தான் தற்போது நிலவுகிறது. ஒரு கிலோ தக்காளி சுமார் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் தக்காளியை விற்று கோடீஸ்வரர்களான கதையும் இருக்கும்.
நாளுக்கு நாள் தக்காளியின் விலை உயர்வு வியாபாரிகளுக்கு லாபம் என்றாலும், வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. இதனால், அன்றாடம் சமையலில் தக்காளி பயன்படுத்துவதும் குறைந்து வருகிறது. தக்காளி விலை குறையும் வரை பெரும்பாலானோர் தக்காளி இல்லாமல் குழம்பு வைக்கவும் இறங்கிவிட்டார்கள். ஆனால், தக்காளிக்கு பதிலாக சில பொருட்கள் இருக்கின்றன. இவை குழம்பிற்கு தக்காளி போன்றே சுவையை கொடுக்கக்கூடியவை. விலையும் சற்று குறைவு தான். அப்படியென்ன பொருள் வாங்க பார்க்கலாம்.
புளி விழுது:
தக்காளியை விட அதிக புளிப்பு சுவையை கொண்ட பொருள் தான் புளி. சாம்பார், புளிக்குழம்பு போன்றவற்றிற்கு தக்காளிக்கு பதிலாக புளிச்சாற்றை சிறிதளவு பயன்படுத்தலாம். இது குழம்பிற்கு நல்ல சுவையையும், நல்ல நிறத்தையும் தரக்கூடியது. எனவே, தக்காளி விலை குறையும் வரை புளியை பயன்படுத்தி வரலாம்.
மாம்பழம்:
தக்காளிக்கு மாம்பழம் ஒரு சிறந்த மாற்றாகும். இது தக்காளிக்கு ஒத்த இனிப்பைக் கொண்டுள்ளது. மாம்பழத்தின் விழுதை பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது மாங்காய் பொடி கிடைத்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுவும் நல்ல புளிப்பு மற்றும் இனிப்பு கலந்த சுவையைக் கொண்டது மற்றும் இது விலை குறைவானதும் கூட. இந்த மாங்காய் தூளை நீங்கள் சமைக்கும் போது ஒரு டீஸ்பூன் அல்லது ஒரு டேபிள் ஸ்பூன் என உங்களுக்கு தேவையான அளவு குழம்பு அல்லது வேறு சமையலில் சேர்த்துக் கொள்ளலாம்.
புளித்த தயிர்:
சமையலில் தக்காளிக்கு பதிலாக தயிரை சேர்த்துக் கொள்ளலாம். தயிரின் அமிலச் சுவை மசாலாப் பொருட்களுடன் நன்றாக கலந்து உங்களுக்கு நல்ல சுவையை தருவதோடு குழம்பு சற்று கெட்டியாகவும் இருக்கும். ஆனால், 2 - 3 நாட்கள் பழமையான, அதாவது நன்றாக புளித்த தயிராக இருக்க வேண்டும். இருப்பினும், தயிரை சமைத்து முடித்த பின் இறுதியில் தான் சேர்த்து கிளற வேண்டும்.
நெல்லிக்காய்:
நெல்லிக்காயை தக்காளிக்கு மாற்றாக பயன்படுத்தலாம். ஆனால், இதில் புளிப்பு சற்று கூடுதலாக இருக்கும். எனவே குழம்பில் சேர்க்கும்போது அளவு குறித்து கவனமாக இருக்க வேண்டும். மேலும் நெல்லிக்காயை சமையலில் பயன்படுத்துவதாக இருந்தால், அந்த நெல்லிக்காய் துண்டுகளை சர்க்கரை சேர்த்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்து அரைத்து, அதன் பின் சமையலில் சேர்க்கவும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…