Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

பாலியல் புகார்.. இந்திய மல்யுத்த சங்கத்திற்கு எதிராக வீரர்/வீராங்கனைகள் போராட்டம்!!

Sekar Updated:
பாலியல் புகார்.. இந்திய மல்யுத்த சங்கத்திற்கு எதிராக வீரர்/வீராங்கனைகள் போராட்டம்!!Representative Image.

200க்கும் மேற்பட்ட இந்திய மல்யுத்த வீரர்கள் இரண்டாவது நாளாக டெல்லியில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல விளையாட்டு வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பல பயிற்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

இந்தியாவின் மிகவும் பிரபலமான பெண் மல்யுத்த வீரர்களில் ஒருவரான மூன்று காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகட், குற்றச்சாட்டுகளுக்குப் பகிரங்கமாக ஆதவளித்ததை அடுத்து, இந்திய விளையாட்டு அமைச்சகம் கடந்த புதன்கிழமை இந்திய மல்யுத்த கூட்டமைப்பிடம் (WFI) குற்றச்சாட்டுகளுக்கு 72 மணி நேரத்திற்குள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டது.

எனினும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். "பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, அவை உண்மை என கண்டறியப்பட்டால் தற்கொலை செய்து கொள்வேன். பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை." என்று சரண் சிங் கூறினார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரான புனியாவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். "கூட்டமைப்பின் வேலை வீரர்களை ஆதரிப்பதும், அவர்களின் விளையாட்டுத் தேவைகளைக் கவனிப்பதும் ஆகும். பிரச்சனை இருந்தால், அதைத் தீர்க்க வேண்டும்." என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

28 வயதான வினேஷ் போகட், தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற பொதுப் போராட்டத்தில், பல முன்னணி மல்யுத்த வீரர்களின் ஆதரவுடன் சரண் சிங் மற்றும் பயிற்சியாளர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

"பெண் மல்யுத்த வீரர்கள் தேசிய முகாம்களில் பயிற்சியாளர்களாலும் இந்திய மல்யுத்த சங்க தலைவராலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர். தேசிய முகாமில் குறைந்தபட்சம் 10-20 பெண்களையாவது எனக்குத் தெரியும், அவர்கள் என்னிடம் வந்து தங்கள் சோக கதைகளைச் சொன்னார்கள்." என்று அவர் கூறினார்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த சக மல்யுத்த வீரரும் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்றவருமான சாக்ஷி மாலிக் குற்றச்சாட்டுகளை ஆமோதித்தார். "விளையாட்டு வீரர்கள் நாட்டிற்காக பதக்கங்களை வெல்ல கடுமையாக உழைக்கிறார்கள், ஆனால் கூட்டமைப்பு எங்களை வீழ்த்துவதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

வினேஷ் போகட்டின் உறவினரும், முன்னாள் மல்யுத்த வீரரும், பாஜக உறுப்பினரும், ஹரியானா அரசாங்கத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கும் பபிதா போகட், ட்விட்டரில், "இந்த மல்யுத்த விஷயத்தில் எனது சக வீரர்களுடன் நான் நிற்கிறேன். உங்கள் அனைவருக்கும் நான் உறுதியளிக்கிறேன். இந்த பிரச்சினை ஒவ்வொரு மட்டத்திலும் அரசாங்கத்திடம் உள்ளது, மேலும் எதிர்காலம் வீரர்கள் சரியாக உணரும் விதத்தில் முடிவு செய்யப்படும்." என்றார்.

பெண்களின் பிரச்சனைகளை கவனிக்கும் டெல்லி மகளிர் ஆணையம், விளையாட்டு அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மற்றும் வழக்குப்பதிவு செய்ய நகர காவல்துறையை கேட்டுக் கொண்டுள்ளது. அமைப்பின் தலைவர் ஸ்வாதி மாலிவாலும் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்களை சந்தித்தார்.

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து நாட்டின் தேசிய சைக்கிள் ஓட்டுதல் அணியின் பயிற்சியாளர் பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு இந்த குற்றச்சாட்டுகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்