Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தை திருநாள் அன்று சொல்ல வேண்டிய 108 சூரிய துதி என்ன...?

Manoj Krishnamoorthi Updated:
தை திருநாள் அன்று சொல்ல வேண்டிய 108 சூரிய துதி என்ன...?Representative Image.

வாழ்வு அளித்த இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடும் திருநாள் தைப்பொங்கல் ஆகும். அனைத்து ஜீவராசிக்கும் ஆதிமூலமாக இருக்கும் சூரியன் இல்லாமல் இயற்கையில் எந்த நிகழ்வும் இருக்காது.  பூமிக்கு ஒளி அளிக்கும் கதிரவனை வணங்கி ஆரம்பிக்கும் இந்த தை திருநாளில் சொல்ல வேண்டிய சூரிய நாராயணன் மந்திரம் பற்றி காண்போம். 

தை முதல் நாளே தை திருநாள் ஆகும். தமிழனின் பாரம்பரிய  திருவிழாவான பொங்கல் நம் வாழ்வியலை மேம்படுத்தும் விவசாய விளைச்சலுக்கு நன்றி சொல்லும் கடமையாக பார்க்கப்படுகிறது. முதல் நாள் விளைச்சலுக்கு ஒளி அளித்த சூரியனுக்கும் இரண்டாம் நாள் விவசாயத்திற்கு உதவிய கால்நடைக்கு நன்றி சொல்லும்விதமாக கொண்டாடப்படுவது என்பது நமக்கு நன்கு அறிந்த ஒன்று தான். 

தை திருநாள் அன்று சொல்ல வேண்டிய 108 சூரிய துதி என்ன...?Representative Image

சூரிய பகவான் 108 துதி

தை திருநாளில் பொங்கல் வைத்து பூஜை செய்து சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது நம் வழக்கம் ஆகும். இந்த தினத்தின் நாயகனான சூரிய பகவானை வணங்கி பூஜையின் போது சொல்ல வேண்டிய மந்திரத்தை பார்ப்போம்.

ஓம் அதிதி புத்ரனே போற்றி! 

ஓம் அளத்தற்கரியனே போற்றி! 

ஓம் அறுகுப்பிரியனே போற்றி! 

ஓம் அருணன் சோதரனே போற்றி!

ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி! 

ஓம் அக்கினி அதிதேவதையே போற்றி! 

ஓம் ஆண் கிரகமே போற்றி! 

ஓம் ஆதிவார நாதனே போற்றி! 

ஓம் ஆய்வின் இலக்கே போற்றி! 

ஓம் ஆறாண்டு ஆள்பவனே போற்றி! 

ஓம் ஆன்மாவே போற்றி! 

ஓம் ஆதித்யஹ்ருதய ப்ரியனே போற்றி! 

ஓம் இருள் நீக்கியே போற்றி! 

ஓம் இயக்க சக்தியே போற்றி!

ஓம் ஈசன் வலக்கண்ணே போற்றி! 

ஓம் உக்கிரனே போற்றி! 

ஓம் உஷா நாதனே போற்றி! 

ஓம் உவமைப் பொருளே போற்றி! 

ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி! 

ஓம் உத்திரநாதனே போற்றி! 

ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி! 

ஓம் என்பானவனே போற்றி! 

ஓம் எருக்கு சமித்தனே போற்றி! 

ஓம் எழுபரித் தேரனே போற்றி!

ஓம் எண்ணெழுத்து மந்திரனே போற்றி! 

ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி! 

ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி! 

ஓம் ஒளிப்பிழம்பே போற்றி! 

ஓம் ஓராழித்தேரனே போற்றி!

ஓம் ஓய்விலானே போற்றி! 

ஓம் ஓங்காரம் துதித்தவனே போற்றி!

ஓம் கதிரவனே போற்றி! 

ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி! 

ஓம் களங்கமிலானே போற்றி!

ஓம் கமலம் விரிப்பவனே போற்றி! 

ஓம் கர்ணன் தந்தையே போற்றி! 

ஓம் கனலே போற்றி!

ஓம் கண்ணின் காவலே போற்றி! 

ஓம் கற்பரசிச் சேவகனே போற்றி!

ஓம் கண்டியூரில் அருள்பவனே போற்றி! 

ஓம் காஷ்யபர் மைந்தனே போற்றி! 

ஓம் காயத்ரி தேவனே போற்றி! 

ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி! 

ஓம் காலக் கணக்கே போற்றி!

ஓம் காய்பவனே போற்றி! 

ஓம் காலை மாலை கனிவோனே போற்றி! 

ஓம் கிழக்கு நோக்கனே போற்றி! 

ஓம் கிருத்திகை அதிபதியே போற்றி! 

ஓம் கிரக நாயகனே போற்றி! 

ஓம் கிருபாகரனே போற்றி! 

ஓம் குந்திக்கருளியவனே போற்றி! 

ஓம் குறை தீர்ப்பவனே போற்றி! 

ஓம் கோதுமைப்பிரியனே போற்றி! 

ஓம் கோனார்க்கில் அருள்பவனே போற்றி!

ஓம் ஞாயிறே போற்றி! 

ஓம் ஞாலக் காவலே போற்றி! 

ஓம் சனீஸ்வரன் தந்தையே போற்றி! 

ஓம் சங்கராந்தி நாயகனே போற்றி! 

ஓம் சாட்சித் தேவனே போற்றி! 

ஓம் சமரிலானே போற்றி! 

ஓம் சிங்கக் கொடியனே போற்றி! 

ஓம் சிம்மராசி அதிபதியே போற்றி! 

ஓம் சிரஞ்சீவியே போற்றி! 

ஓம் சிதம்பரத்தாலயமுளானே போற்றி!

ஓம் சுயம்பிரகாசனே போற்றி! 

ஓம் சூர்ய நமஸ்காரப்பிரியனே போற்றி! 

ஓம் சூரியனார் கோயில் தேவனே போற்றி! 

ஓம் செம்மேனியனே போற்றி! 

ஓம் செம்மலர்ப்பிரியனே போற்றி!  

ஓம் செந்நிறக்குடையனே போற்றி! 

ஓம் செந்தாமரை ஏந்தியவனே போற்றி! 

ஓம் சூலாயுதனே போற்றி! 

ஓம் சோழர் மூதாதையனே போற்றி! 

ஓம் சவுர மதத் தலைவனே போற்றி!

ஓம் தனிக்கோயிலுளானே போற்றி! 

ஓம் தாமிர உலோகனே போற்றி! 

ஓம் தூயவனே போற்றி! 

ஓம் திருமேய்ச்சூரில் அருள்பவனே போற்றி! 

ஓம் நடுவிருப்போனே போற்றி! 

ஓம் நன்னிலத்து அருள்பவனே போற்றி!

ஓம் நலமே அளிப்பவனே போற்றி! 

ஓம் நளாயினிக்கு அருளியவனே போற்றி! 

ஓம் நல்லுலகத் தந்தையே போற்றி! 

ஓம் நாடப்படுபவனே போற்றி!

ஓம் நீதிதேவனே போற்றி! 

ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி! 

ஓம் பகற்காரணனே போற்றி! 

ஓம் பனையபுரத்து அருள்பவனே போற்றி! 

ஓம் பரஞ்சோதியே போற்றி! 

ஓம் பரிட்சித்துக்கு அருளியவனே போற்றி! 

ஓம் பாலை நிலத்தேவனே போற்றி! 

ஓம் பிரபாகரனே போற்றி! 

ஓம் புகழ்வாய்த்தவனே போற்றி! 

ஓம் புத்தியளிப்பவனே போற்றி!

ஓம் மல நாசகனே போற்றி! 

ஓம் மதி ஒளிரச் செய்பவனே போற்றி! 

ஓம் மயில் வாகனனே போற்றி! 

ஓம் மயூரகவிக்கு அருளியவனே போற்றி! 

ஓம் முதல் கிரகமே போற்றி! 

ஓம் முக்கோணக் கோலனே போற்றி! 

ஓம் முழுமுதற் பொருளே போற்றி! 

ஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றி! 

ஓம் ரவிக்குலத்தலைவனே போற்றி! 

ஓம் ருத்ரன் பிரத்யதி தேவதையே போற்றி!

ஓம் விடியச் செய்பவனே போற்றி! 

ஓம் வலிவலத்து அருள்பவனே போற்றி! 

ஓம் ஹரீம் பீஜ மந்திரனே போற்றி! 

ஓம் சூரிய நாராயணனே போற்றி! போற்றி!

என இந்த 108 துதியை பொங்கல் வைத்து பூஜை செய்யும்போது சூரியனை மனதில் நினைத்து சொல்வது, சூரிய பகவானை நம் வணங்கி நன்றி சொல்வதாக பார்க்கப்படும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்