Tue ,Jun 25, 2024

சென்செக்ஸ் 77,341.08
131.18sensex(0.17%)
நிஃப்டி23,537.85
36.75sensex(0.16%)
USD
81.57
Exclusive

தீராக் கவலைகளைத் தீர்த்தருளும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்..! | Tiruchengode Arthanareeswarar Temple

Gowthami Subramani Updated:
தீராக் கவலைகளைத் தீர்த்தருளும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்..! | Tiruchengode Arthanareeswarar TempleRepresentative Image.

திருச்செங்கோடு புகழ்பெற்ற ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் தலத்தினைப் பற்றி அறியாதோர் எவருமிலர். திருஞானசம்பந்தர் அவர்களால் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். அர்த்தநாரீஸ்வரர், பாகம்பிரியாள், செங்கோட்டு வேலவர் என ஒவ்வொரு கடவுளுக்கும் தனி சந்நிதி அமைந்து, பிரம்மாண்டமான அமைப்பைக் கொண்ட தலமாகும். இந்த அற்புதப் புகழ் பெற்ற, திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வரலாறு, சிறப்புகள், அமைவிடம் மற்றும் இன்னும் பல சுவாரஸ்யமானத் தகவல்களைக் காணலாம்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் வரலாறு

செங்கோடு என்பது மலை சிவந்த நிறமாகக் காட்சி தருவதைக் குறிக்கிறது. இத்திருமலை, நாகமலை, தெய்வத்திருமலை, உரசகிரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.

சிவபெருமான் ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் இடையே சண்டை உண்டானது. இதில் யார் பெரியவர், வலியவன் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், இருவருக்கும் இடையே போர் மூண்டதில் உலகெங்கும் பேரழிவுகள் உண்டானது. அது மட்டுமல்லாமல், ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று உருவானது. அதில், மேரு மலையின் உச்சியை பலம் கொண்டு ஆதிசேஷன் அழுத்திப் பிடிக்க, அந்தப் பிடியினை வாயு தேவன் தளர்த்திட வேண்டும் என்பதே இருவருக்கும் இடையேயான ஒப்பந்தம் ஆகும்.

இந்த சண்டை நடந்ததில், உலகம் அழிந்து விடப் போகிறது என்ற பயத்தில், தேவர்கள் அனைவரும் நாகரை வணங்கி போரை நிறுத்தும் படி கேட்டனர். அவர்களது பேச்சுக்கிணங்க, ஆதிசேஷன் தன் பிடியினைச் சற்று தளர்த்த, இது தான் சமயம் என வாயு பகவான் அடித்த வேகத்தில், மேரு மலையின் ஒரு சிகரப் பகுதியும், ஆதிசேஷனின் ஒரு தலையும் பெயர்ந்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு தென் திசைப் பக்கமாக வந்து விழுந்தது.

இதில், ஆதிசேஷனின் தலையுடன் மோதியதால், இரத்தம் தோய்ந்து, செந்திற மலையாக மாறியது. இது திருச்செங்கோடு மலை என்ற பெயர் பெற்றது. இவ்வாறு பறந்து வந்து தென் திசையில் விழுந்த மேரு மலை, மூன்று பாகங்களாக சிதறியது. அதில் ஒன்று திருவண்ணாமலையாகவும், மற்றொன்று இலங்கை மற்றும் மூன்றாவது திருச்செங்கோடு மலையாகவும் மாறியது.

உமையவள் இடப்பாகம் பெற்றது எப்படி தெரியுமா.?

கைலாசபுரியில் இருந்து முருகப் பெருமான் பிரிந்து சென்றதால், உள்ளம் வருந்திய நிலையில் இருந்த சிவபெருமான், பார்வதி தேவியை அழைத்துக் கொண்டு இயற்கையைக் கண் குளிரக் கண்டு மனதை ஆறுதல் படுத்திக் கொள்ள நினைத்தார். இவ்வாறு செல்கையில், தன் கணவருடன் செல்லும் களிப்பின் மிகுதியால், தனது திருக்கரங்களால், பெருமானின் இரு கண்களையும் விளையாட்டுத் தனமாக மூடிவிட்டார். இதனால், சூரியன் ஒரு கண்ணும், சந்திரன் மற்றொரு கண்ணுமாய் விளங்கும் சிவபெருமானின் கண்கள் மூடியதால், உலகமே இருளில் மூழ்கியது. அதன் பிறகு, முக்கண்ணனைச் சந்தித்து, பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை மூடிய காரணத்தால், உலகின் பல்வேறு உயிரினங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியது. இதனால், பார்வதி தேவிக்குப் பாவம் சேர்ந்ததாகவும், இந்த பாவத்தை நீக்க பார்வதி தேவி பூவுலகில் பிறந்து, காசி, காஞ்சிபுரம், கேதாரம் போன்ற க்ஷேத்திரங்களில் தவம் மேற்கொள்ள வேண்டும் எனவும், தவம் செய்த பிறகு, இங்கு வந்து சந்தித்து என்னுடன் அழைத்துச் செல்வேன் என கூறியருளியுள்ளார்.

இவ்வாறாகவே, காஞ்சியில் மணலால் சிவலிங்கங்கள் செய்து, பார்வதி தேவி தவம் செய்த சமயத்தில் பெரு வெள்ளம் வந்தது. இதனால் எங்கு தன் மணல் லிங்கம் தண்ணீரோடு சென்று விடுமோ என்ற பயத்தில் அதனைக் கட்டி அணைத்து கொண்டார். இந்த காட்சியைக் கண்ட சிவபிரான் மனமிறங்கி பார்வதி தேவியிடம் வரம் கேள் என்று கேட்டுக் கொண்டார். இதனால், சிவபெருமானிடம் தங்களது திருமேனியில் இடப்பாகம் தந்தருள வேண்டும் என பார்வதி தேவி கேட்டுக் கொண்டார். அதற்கு, நீ எனது கண்களை மூடிய பாவமானது காஞ்சியில் தவம் செய்ததால் நீங்கப் பெற்றது. பின், திருவண்ணாமலைக்குச் சென்று தவம் புரிந்து தவம் மேற்கொள்வாயாக எனக் கூறினார்.

இவ்வாறாக தவமிருந்த தேவியிடம், உனது எண்ணத்தை அறிந்ததாகக் கூறி, ஆனாலும் தவம் நிறைவு பெற நீ செந்நிற மலையான திருச்செங்கோடு மலைக்குச் சென்று தவமியற்ற, எனது இட பாகத்தை வழங்கி அருள்வேன் என சிவபெருமான் கூறினார். இவ்வாறே, திருச்செங்கோடு மலைக்குச் சென்று பல காய், கனிகளுடனும், பூஜை பொருள்களுடனும் கௌரி விரதம் தொடங்கி தனது இடது பாகத்தை பார்வதி தேவிக்கு கொடுத்தருளினார் சிவபெருமான். அதன் படியே, சிவபெருமானின் இடப்பாகம் பெற்றாள் உமையவள்.

அர்த்தநாரீஸ்வரர் கோவில் சிறப்புகள்

அர்த்தநாரீஸ்வரர் என்ற சிவத்தலமாக இருப்பினும், இது முருகப் பெருமானுக்கு உகந்த தலமாகும்.

மலை மீது அமைந்துள்ள இந்தக் கோவில், 1200 படிகளைக் கொண்டுள்ளது. இதன் படிகட்டுகள் பாம்பு உருவங்களைக் கொண்டுள்ளது.

இம்மலையை மேலமாட வீதியில் இருந்து பார்க்கும் போது, நாகம் போன்று காட்சி தருவதால், நாகாசலம் நாககிரி என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.

தலம் அமைவிடம்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் அமைந்துள்ள இடம் குறித்த விவரங்களைக் காணலாம்.

அர்த்தநாரீஸ்வரர் கோவில்

திருச்செங்கோடு

நாமக்கல் மாவட்டம்

637 211.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்