Sun ,Apr 21, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்ற 10 சூப்பர் அறிவிப்புகள்.. | Agriculture Budget 2023-24 Highlights in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்ற 10 சூப்பர் அறிவிப்புகள்.. | Agriculture Budget 2023-24 Highlights in TamilRepresentative Image.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது, 2023 - 2024 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார். திமுக அரசு பொறுப்பேற்றது முதல் வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் வேளாண் துறை மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலனுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் முத்தான 10 முக்கிய அறிவிப்புகள் பற்றி பார்க்கலாம். 

வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்ற 10 சூப்பர் அறிவிப்புகள்.. | Agriculture Budget 2023-24 Highlights in TamilRepresentative Image

வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்ற 10 சூப்பர் அறிவிப்புகள்:

1. சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு:

இதுவரை நெற்பயிரில் மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு மட்டும், ஐந்து லட்சம் ரூபாய் பரிசு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, நெல்பயிரோடு சேர்த்து கம்பு, நிலக்கடலை, எள், கரும்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, துவரை, உளுந்து, பச்சைப் பயறு, போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கும் தலா ரூ.5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். அதோடு கூடவே நம்மாழ்வார் விருதும் வழங்கப்படும்.


2. பள்ளி மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா திட்டம்:

இந்த காலத்து மாணவர்களுக்கு விவசாயம் குறித்து எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய ஆபத்தான விஷயம். எனவே, அவர்களுக்கு வேளாண்மையின் மகிமையை தெரிந்துக்கொள்ள கல்வி துறையுடன் இணைந்து மாணவர்களுக்கு பண்ணனை சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


3. விவசாயிகளுக்கு அயல் நாட்டில் பயிற்சி:

வெளிநாட்டு வேளாண் தொழில்நுட்பங்களை தெரிந்து கொண்டு, நமது மாநிலத்தில் பின்பற்றும் வகையில், விவசாயிகளுக்கு அயல் நாட்டில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


4. பண்ணை குடும்பங்களுக்கு பழச்செடி தொகுப்பு:

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு கிராமங்களிலும் தலா 300 குடும்பங்களுக்கு மா, கொய்யா, பலா, நெல்லி, எலுமிச்சை, சீதாப்பழம் போன்ற பல்லாண்டு பழச்செடி தொகுப்பு விநியோகம் செய்யப்படும். இதற்காக, ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


5. மதுரை மல்லிகைக்கு இயக்கம்:

இராமநாதபுரத்தில் மல்லிகை செடிகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்யவும், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் மல்லிகை பயிர் வேளாண்மை முறைகளை விவசாயிகளுக்கு கற்றுத் தரவும் ரூ. 7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்ற 10 சூப்பர் அறிவிப்புகள்.. | Agriculture Budget 2023-24 Highlights in TamilRepresentative Image

6. கரும்பு, நெல்லுக்கு சிறப்பு ஊக்கத் தொகை:

கரும்பு விவசாயிகளின் நலன் காக்கும் வகையில், சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ. 195 கூடுதலாக வழங்கப்படும். மேலும், சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு கூடுதலாக ரூபாய் 100 ஊக்கத் தொகையாகவும், பொது ரக நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 75 ஊக்கத் தொகையாகவும் வழங்கப்படும். 25 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


7. வேளாண் பட்டதாரி இளைஞர்களுக்கு கடனுதவி:

வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு உதவ 4 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 200 வேளாண் பட்டதாரி இளைஞர்கள் தொழில் தொடங்க 2 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறது. இது மட்டும் அல்ல இன்னும் ஏராளமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.


8. புதிய இணையதளம் Grains:

உழவர் நலன் சார்ந்த பல்வேறு துறைகளில் திட்ட பலன்களை விவசாயிகள் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலங்களுக்கு சென்று பல்வேறு ஆவணங்களை தனித்தனி படிவங்களில் தர வேண்டியுள்ளது.

இத்தகைய நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள நில உரிமையாளர், சாகுபடி செய்யும் விவசாயிகள், அனைத்து விவசாயிகளின் அடிப்படை தகவல்களான வங்கி கணக்கு, ஆதார் எண், நில விவரங்கள், பயிர் சாகுபடி விவரங்களை கிராம வாரியாக சேகரித்து கணினி மையமாக்கி GRAINS (One Stop Solution) என்ற புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்படும்.


9. சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதல் மானியம்:

உயர் மதிப்பு வேளாண் இயந்திரங்கள் உள்ளிட்ட விவசாய கருவிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம் வழங்குவதற்காக, ஆதிதிராவிட சிறு குறு விவசாயிகளுக்கு 10 கோடி ரூபாயும், பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு 1 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


10.  வட்டார அளவில் வாட்ஸ்அப் குழு:

விவசாயிகளுக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்க வட்டார அளவில் whatsapp குழு உருவாக்கப்படும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்