Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அணைக்கட்டு அருகே 15கிலோ மீட்டர் நடந்து சென்று பிரசவித்த கர்ப்பிணி

Baskarans Updated:
அணைக்கட்டு அருகே 15கிலோ மீட்டர் நடந்து சென்று பிரசவித்த கர்ப்பிணிRepresentative Image.

வேலூர்: அணைக்கட்டு அருகே சாலை வசதியில்லாததால், 15கிலோ மீட்டர் கர்ப்பிணி பெண் வலியுடன் நடந்து வந்து மருத்துவமனையில் சேர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகேயுள்ள ஜார்த்தன்கொல்லை ஊராட்சிக்குட்பட்ட முத்தன் குடிசை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு. கூலிதொழிலாளியான இவருக்கும், அதேப்பகுதியைச் சேர்ந்த சிவகாமி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு 3வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், சிவகாமி மீண்டும் கருத்தரித்தார். 

தற்போது நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்றுமுன்தினம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கணவர் மற்றும் அவரது உறவினர்கள் சாலை வசதியில்லாததால், டோலி கட்டி சிவகாமியை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல முடிவு செய்தனர்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், சிவகாமி கிராமத்தில் இருந்து நடைபயணமாக தெள்ளை கிராமம் வழியாக சுமார் 15கிலோமீட்டர் நடந்து வந்து, கணியம்பாடி அடுத்த துத்துக்காட்டிற்கு வந்தார். 

இதையடுத்து உறவினர்கள் ஆட்டோ மூலம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சுகப்பிரமாகி அழகான ஆண்குழந்தை பிறந்தது.மேலும் தாயும், சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்த தாய் மற்றும் குழந்தை ஆகியோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மாலை நேரத்தில் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டதால், சாலை வசதியில்லாத தனது கிராமத்திற்கு குழந்தையுடன் செல்ல முடியாது என்பதால், தெள்ளை கிராமத்தில் உள்ள துத்திகாடு ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் தங்கினர்.

இது குறித்து தகவல் அறிந்த அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, கணியம்பாடி வட்டார மருத்துவ அலுவலர் துரைராஜ் மற்றும் அதிகாரிகள் தெள்ளை மலை கிராமத்துக்கு விரைந்து சென்றனர். அங்கிருந்து குழந்தையுடன் தாய் சிவகாமியை, தாசில்தார் சென்ற ஜீப் மூலம் கணியம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு தாய் சிவகாமி மற்றும் குழந்தைக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. 2 பேரும் ஆரோக்கியமாக இருப்பதால் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் அணைக்கட்டு, கீழ்கொத்தூர், முத்துக்கு மரன் மலை, பீஞ்சமந்தை, ஜார்தான்கொள்ளை வழியாக முத்தன் குடிசை கிராமத்திற்கு தாயுடன் குழந்தையை பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்