Tue ,Mar 05, 2024

சென்செக்ஸ் 73,677.13
-195.16sensex(-0.26%)
நிஃப்டி22,356.30
-49.30sensex(-0.22%)
USD
81.57
Exclusive

நிலநடுக்கம்.. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி.. மீளுமா ஆப்கான்?

Sekar June 22, 2022 & 17:32 [IST]
நிலநடுக்கம்.. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி.. மீளுமா ஆப்கான்?Representative Image.

இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் கிழக்கு ஆப்கானிஸ்தானின் கிராமப்புற, மலைப்பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் தற்போது கிடைத்த தகவலின்படி 1,000 பேர் பலியாகியுள்ளதாகவும், 1,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கோஸ்ட் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பல இடிந்து கடும் சேதமடைந்துள்ளன. கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானை தலிபான் கையகப்படுத்திய பின்னர் மற்றும் அதன் வரலாற்றில் மிக நீண்ட போரில் இருந்து அமெரிக்க இராணுவம் வெளியேறிய பிறகு பல சர்வதேச உதவி நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதால், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களில் மீட்பு முயற்சிகள் சிக்கலானதாக இருக்கும்.

நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில், எல்லைக்கு அருகில் மற்றும் கோஸ்ட் நகருக்கு தென்மேற்கே 50 கிலோமீட்டர் (31 மைல்) தொலைவில் இருந்ததாக அண்டை நாடான பாகிஸ்தானின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இத்தகைய நடுக்கங்கள் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும், குறிப்பாக வீடுகள் மற்றும் மோசமாகக் கட்டப்பட்டிருக்கும் பிற கட்டிடங்கள் சேதமடைவதோடு நிலச்சரிவுகள் அதிகமாக ஏற்படும்.

ஆப்கானிஸ்தான் அவசரகால அதிகாரி ஷராபுதீன் முஸ்லிம் இன்று செய்தியாளர் கூட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை தெரிவித்தார். முன்னதாக, அரசு நடத்தும் பக்தார் செய்தி நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் அப்துல் வாஹித் ராயன் ட்விட்டரில், பக்திகாவில் 90 வீடுகள் இடிந்துவிட்டதாகவும், டஜன் கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக நம்பப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தலிபான் அரசாங்கத்தின் துணை செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி, பாக்டிகாவில் நான்கு மாவட்டங்களை உலுக்கிய பூகம்பத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர் என்று தெரிவித்தாலும் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கையை வழங்கவில்லை.

அண்டை மாநிலமான கோஸ்ட் மாகாணத்தின் ஒரு மாவட்டத்தில், நிலநடுக்கத்தில் குறைந்தது 25 பேர் பலியாகினர் மற்றும் 95 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காபூலில் பிரதமரின் அவசர கூட்டம்

காபூலில், பாக்டிகா மற்றும் கோஸ்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க, பிரதமர் முகமது ஹாசன் அகுண்ட், ஜனாதிபதி மாளிகையில் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார்.

ஷாபாஸ் ஷெரீப் இரங்கல்

இந்த நிலநடுக்கத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தனது தேசம் உதவி செய்யும் என்று கூறியுள்ளார்.

பூகம்பத்தின் அதிர்வுகளை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா முழுவதும் 119 மில்லியன் மக்கள் 500 கிலோமீட்டர் (310 மைல்) தொலைவில் உணர்ந்ததாக ஐரோப்பிய நிலநடுக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மலைப்பாங்கான ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்காசியாவின் பெரிய பகுதியான இந்து குஷ் மலைகள் நீண்ட காலமாக பேரழிவு தரும் நிலநடுக்கங்களால் பாதிக்கப்படக்கூடியவையாகவே இருந்து வருகின்றன.

2015 ஆம் ஆண்டில், ஆப்கான் நாட்டின் வடகிழக்கில் ஏற்பட்ட ஒரு பெரிய பூகம்பம் ஆப்கானிஸ்தான் மற்றும் அண்டை நாடான வடக்கு பாகிஸ்தானில் 200 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது.

2002 ஆம் ஆண்டு 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் வடக்கு ஆப்கானிஸ்தானில் சுமார் 1,000 பேர் கொல்லப்பட்டனர். 1998 இல், அதே வலிமை கொண்ட மற்றொரு பூகம்பம் மற்றும் ஆப்கானிஸ்தானின் தொலைதூர வடகிழக்கில் ஏற்பட்ட நடுக்கம் குறைந்தது 4,500 பேரைக் கொன்றது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்