Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இதென்ன உங்க வீடா... மேடையில் வைத்து திமுக எம்பியை விளாசிய அமைச்சர்!!

Sekar July 14, 2022 & 13:13 [IST]
இதென்ன உங்க வீடா... மேடையில் வைத்து திமுக எம்பியை விளாசிய அமைச்சர்!!Representative Image.

சமீபத்தில் ஒரு பொதுமேடையில், திமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் திமுக எம்பி ஒருவரிடம் ஆவேசமாக நடந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் படு ஸ்பீடாக பரவி வருகிறது. 

திருநெல்வேலி மாவட்டம் கூடங்கும் அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் சுற்று வட்டார இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு சில தினங்களுக்கு முன்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பினை தொடங்கி வைக்கும் நிகழ்வில் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு, தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் திமுக எம்பி ஞானதிரவியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி தொடக்க விழாவிற்கு பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் சிவி கணேசனிடம், திருநெல்வேலியில் கல்குவாரிகள் மூடப்பட்டிருப்பதால் பல ஆயிரம் பேர் வேலை இழப்பு மற்றும் கட்டுமான பொருட்கள் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கணேசன், முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில், அருகில் இருந்த சபாநாயகர் அப்பாவு இது குறித்து மாவட்ட ஆட்சியரை பதில் சொல்லும் படி கோபத்துடன் கூறினார். 

அதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இது பயிற்சி வகுப்பு தொடர்பான நிகழ்வு என்றும் இது பற்றி வேறு ஒரு நிகழ்வில் பேசுவோம் என்று கூற, கோபப்பட்ட சபாநாயகர் மீண்டும் குறுக்கிட்டு பதில் சொல்லும்படி கூறியதால் ஆட்சியர் விஷ்ணு தர்ம சங்கடமான நிலைமைக்கு ஆளாகினார்.

எனினும் பின்னர் நிலைமையை சமாளித்த அவர், இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று கூறி முடித்துக் கொண்டார். இருப்பினும் விடாமல், எத்தனை நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு பத்திரிகை நிருபர் சபாநாயகர் மற்றும் ஆட்சியரை பார்த்து கேள்வியெழுப்பினார்.

இதற்கிடையே அங்கிருந்த திமுக எம்பி ஞானதிரவியம், குவாரிகள் மூடப்பட்டு 60 நாள் ஆச்சு, 50,000 பேர் வேலை இழந்துட்டாங்க, பதில் சொல்ல சொல்லுங்க என கோபத்துடன் ஆட்சியரை மிரட்டும் தொனியில் கூறினார். இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நிலைமை எல்லை மீறுவதை கண்டு சுதாரித்த அமைச்சர் கணேசன், பத்திரிகையாளர்களிடம் பதில் கூற, மீண்டும் ஞானதிரவியம் கோபத்துடன் பேசியதால் கடுப்பான அமைச்சர், "அண்ணே இதென்ன வீடா.. கம்முனு இருங்க" என காட்டத்துடன் கூறினார். பின்னர் இந்த விஷயத்தை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்து பத்திரிகையாளர் சந்திப்பை முடித்து வைத்தார்.

சபாநாயகர், எம்பி கோபத்துக்கு என்ன காரணம்?

திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான் குளத்தில் கடந்த மே 15ஆம் தேதி நடந்த கல்குவாரி விபத்தில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, அரசு சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினர் மாவட்டம் முழுவதும் உள்ள குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டனர். 

இதில் மொத்தமுள்ள 55 குவாரிகளில் 13 குவாரிகள் விதிகளை மீறியதாகவும் அக்குவாரிகளை ஏன் மூடக்கூடாது என்று விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் 41 குவாரிகள் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் அளவு கனிம வளம் எடுத்த காரணத்திற்காக சுமார் 300 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாகவும் பேசப்படுகிறது. கல்குவாரி விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆரம்பத்தில் இருந்தே நேர்மையாக செயல்பட்டு, விதிகளை மீறிய குவாரி உரிமையாளர்களுக்கு எதிராக தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் விதிமீறலில் ஈடுபட்ட குவாரிகளில் திமுக எம்பி ஞானதிரவியத்தின் குவாரியும் ஒன்று உள்ளதாகக் கூறப்படுகிறது. மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருப்பதால் தனது அரசியல் செல்வாக்கின் மூலம் குவாரி மீதான நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க கொடுத்த எந்த அழுத்தத்திற்கும் ஆட்சியர் விஷ்ணு அடிபணியவில்லை என்றும்  இதனால் தான் பொதுமேடை என்றும் கூட பார்க்காமல் எம்பி கொந்தளித்ததற்கு காரணம் என திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதற்கிடையே விபத்து நடைபெற்ற குவாரி உரிமையாளர் சேம்பர் செல்வராஜ் சபாநாயகர் அப்பாவுவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று அப்போதே பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், சேம்பர் செல்வராஜுக்கு ஆதரவாக தான் தலையிட்டு ஆட்சியர் விஷ்ணு உடன்படாததால் கோபப்பட்டிருக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.

பொதுமேடையில் வைத்து ஆட்சியருக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசிய நிகழ்வின் வீடியோ தற்போது வைரலாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்