கடலூரில் பேருந்து ஒன்றில் திடீரென பிரேக் அடித்ததால் படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்த ஒரு பெண் தனது கை குழந்தையுடன் பேருந்தின் வெளியே தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரில் இருந்து பண்ருட்டி, சிதம்பரம், புதுச்சேரி பகுதிகளுக்கு அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகள் தான் அதிக அளவில் இயங்கி வருகின்றன. அதிகளவில் தனியார் பேருந்துகள் இயங்குவதால் போட்டி மனப்பான்மையில் பேருந்துகளை அதிவேகத்தில் இயக்குவது அங்கு வாடிக்கையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.
இந்நிலையில் நேற்று பிற்பகல் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து ஒன்று நெல்லிக்குப்பம் நகர பகுதிகளுக்குள் மிக வேகமாக சென்றுள்ளது. அப்போது, திடீரென எதிரே வந்த சைக்கிள் மீது மோதாமல் இருக்க, பேருந்து டிரைவர் திடீரென பிரேக் அடித்தார்.
அப்போது, படிக்கட்டின் அருகே கை குழந்தையுடன் சீட்டில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் படிக்கட்டு வழியாக தூக்கி வீசப்பட்டு பேருந்துக்கு வெளியே தலைகுப்பற விழுந்தார். இதில் உச்சகட்ட கொடுமையாக, பெண் குழந்தையுடன் வெளியே விழுந்ததை கோடா கவனிக்காமல் ஓட்டுநர் பேருந்தை உடனடியாக இயக்கத் தொடங்கியுள்ளார்.
எனினும் பேருந்தில் பயணித்தவர்கள் சத்தம் போட்டு பேருந்தை நிறுத்தியுள்ளனர். பின்னர், தாயும் சேயும் மீட்கப்பட்டனர். தூக்கி வீசப்பட்டதில் குழந்தைக்கு அதிக காயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக அவர்கள் நெல்லிக்குப்பம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினர். தூக்கி வீசப்பட்டு கீழே வீசப்படும் காட்சியின் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் எதுவும் அளிக்காததால் காவல் நிலையத்தில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அதே நேரம் தனியார் பேருந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…