Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழக அரசின் மெத்தனப்போக்கு.. விவசாயிகளுக்கு பாதிப்பு.. திமுக எம்எல்ஏ கொதிப்பு!!

Sekar July 27, 2022 & 16:11 [IST]
தமிழக அரசின் மெத்தனப்போக்கு.. விவசாயிகளுக்கு பாதிப்பு.. திமுக எம்எல்ஏ கொதிப்பு!!Representative Image.

தமிழகத்தில் திமுக அரசின் மெத்தனப்போக்கால், காவிரி பாசனப்பகுதி விவசாயிகள் கடும் பாதிப்பை சந்திக்கும் சூழல் நிலவுவதாக திமுக எம்எல்ஏ டி.வேல்முருகன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக தமிழகத்தில், குறிப்பாக காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் ஜூன் மற்றும் ஜூலையில் குறுவை நெல் சாகுபடி தொடங்கும். மேலும் இந்த ஆண்டு காவிரியில் நீர் வரத்து அதிகம் உள்ளதோடு, மேட்டூர் அணையில் நீர் இருப்பும் மிகவும் திருப்திகரமாகவே உள்ளது.

மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக கடந்த மே மாதம் 24 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் அதிக அளவில் குறுவை சாகுபடியில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தஞ்சாவூர் மாவட்ட த்தில் மட்டும் குறுவை சாகுபடி இலக்கை தாண்டி 1,30,000 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், கடந்தாண்டைப் போலவே இந்த ஆண்டும் குறுவை சாகுபடி செய்துள்ள நெற்பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய தமிழக அரசு சார்பில் இதுவரை எந்தவித அறிவிப்பும் வராமல் இருப்பது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்யாத காரணத்தால், விவசாயிகள் பூச்சி தாக்குதல், பருவம் தவறி பெய்த மழை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இழப்பீடு பெற முடியாத சூழல் உருவாகியது.

மேலும் காலம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணமும் முழுமையாக கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், நடப்பாண்டிற்கு பயிர் காப்பீடு செய்ய ஜூலை 31'ஐ கடைசி தேதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால் போன வருடம் போலவே பயிர் காப்பீடு செய்வதற்கான நிறுவனம் எது என்று தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால் யாரிடம் பயிர் காப்பீடு செய்வது என்பது தெரியாமல் விவசாயிகள் விக்கித்து நிற்கின்றனர்.

குறிப்பாக, குறுவை சாகுபடி செய்ய கந்துவட்டிக்கும், நகைக்கடனும் வாங்கியுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள், பூச்சி தாக்குதல், அறுவடைக் காலத்தில் மழை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது இதனால் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில், கடந்த சட்டசபைத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வென்று எம்எல்ஏவான, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் டி.வேல்முருகன் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் தமிழக அரசு தமிழக விவசாயிகளை வஞ்சிக்கக் கூடாது என விளாசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில், தமிழக அரசு குறுவை பயிர் காப்பீடு செய்வதற்கான காப்பீட்டு நிறுவனம் எது என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிடுவதோடு, காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கவும், கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க தமிழ்நாடு வேளாண் துறையும், தமிழக அரசும் விரைந்து செயல்பட வேண்டும் எனத் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் எந்த நிறுவனமும் தமிழக விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பெற வரவில்லையென்றால் தமிழ்நாடு அரசே தனியாக பயிர் காப்பீடு செய்வதற்கான நிறுவனத்தை துவக்க வேண்டும் என கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்