Aadi Thengai Paal Recipe in Tamil: ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு விஷேசமான மாதம் என்பார்கள். அதனால் இம்மாதம் வந்துவிட்டாலே அம்மனுக்கு பூஜைகள் செய்வது, விரதம் இருப்பது, கூழ் ஊற்றுவது என்று அனைத்து அம்மன் கோவிலும் களைகட்ட ஆரம்பித்துவிடும். அதன் ஒருபகுதியாக பல பெண்கள் வெள்ளிகிழமை தோறும் வீட்டை மங்களகரமாக அலங்கரித்து வீட்டிலேயே அம்மன் சிலை அல்லது உருவப்படங்களை வைத்து பூஜை செய்து நைவேத்தியம் படைத்து பிரசாதங்கள் வழங்குவார்கள். அந்த பிரசாதங்களில் முக்கியமாக இடம்பெறுவது தேங்காய் பால் பிரசாதம் ஆகும். அத்தகைய ஆடி மாத சிறப்பு தேங்காய் பாலை எப்படி சுவையாக செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – ¾ கப் (பொடித்தது)
முழு தேங்காய் – 1
சுக்கு பொடி – 2 ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 5
முந்திரி பருப்பு – 10
செய்முறை:
❖ முதலில் தேங்காயை உடைத்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். பின்னர், ஒரு வாணலியில் பாசிப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
❖ இப்போது இன்னொரு பாத்திரத்தில் பொடித்து வைத்துள்ள வெல்லத்தை போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளுங்கள்.
❖ நாம் நறுக்கி வைத்துள்ள தேங்காய் துண்டுகளை மிக்ஸியில் போட்டு சுக்கு, ஏலக்காய் சேர்த்துக் கொள்ளுங்கள். அதோடு வறுத்து வைத்துள்ள பாசிப்பருப்பை ஒருமுறை தண்ணீரில் கழுவி வடிகட்டி சேர்த்துக்கொள்ளுங்கள்.
❖ இதில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக நைசாக அரைத்து, துணி அல்லது வடிகட்டியில் போட்டு முதல் பாலை எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி மூன்று முறையும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பால் எடுத்துக் கொண்டு சக்கையை தூக்கி போட்டுவிடுங்கள்.
❖ இந்த பாலை ஒருபாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் சூடேற்றிக்கொள்ளுங்கள். சூடேற ஆரம்பித்தவுடன் நாம் காய்ச்சி வைத்துள்ள வெல்லப்பாகுவை வடிகட்டி அதோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
❖ நுரை கட்ட ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். அதிகமாக கொதிக்க விடக்கூடாது. பின்னர், ஒரு சின்ன வாணலியில் நெய் ஊற்றி சூடேறியதும் முந்திரி பருப்பை உடைத்து போட்டு பொன்னிறமாக வறுத்து தேங்காய் பாலுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.
❖ அவ்வளவு தாங்க.. சுவையான தேங்காய் பால் ரெடி. இதை ஆடி மாதத்தில் தான் செய்ய வேண்டும் என்று கிடையாது. எப்போது வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்லது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…