Mon ,May 27, 2024

சென்செக்ஸ் 75,410.39
-7.65sensex(-0.01%)
நிஃப்டி22,957.10
-10.55sensex(-0.05%)
USD
81.57
Exclusive

Temple for Punarpoosam Natchathiram | புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கோவில் எங்கு உள்ளது?

Nandhinipriya Ganeshan Updated:
Temple for Punarpoosam Natchathiram | புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கோவில் எங்கு உள்ளது?Representative Image.

ஸ்ரீராமபிரானின் அவதார நட்சத்திரம் புனர்பூசம் அல்லது புனர்வசு. இதன் முதல் மூன்று பாதங்கள் மிதுனராசியிலும், கடைசி பாதம் கடகராசியிலும் இடம்பெறும். தந்தையின் சொல்லை கேட்டு நடப்பதிலும், எந்த கஷ்டங்களையும் பொறுமையுடன் சகித்துக்கொள்வதிலும், மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக எதையும் தியாகம் செய்வதிலும் உங்களுக்கு நிகர் நீங்கள் தான். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் சத்தியத்துக்கும் தர்மத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பதில் வல்லவர். குருபகவானை அதிபதியாக கொண்ட நீங்கள் சாந்தமான சாத்விக குணம் படைத்தவர்களாக இருப்பீர்கள். அதேசமயம், சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். மற்றவர்களும் அப்படியே நடக்க வேண்டுமென்று வலியுறுத்துவீர்கள். உங்களுக்கு நீண்ட தூரம் நடப்பது மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும். தெய்வ பக்தி அதிகக்கொண்ட நீங்கள், அடிக்கடி கோயில் விழாக்களில் அன்னதானம் செய்ய விரும்புவீர்கள். மனிதர்களை மட்டுமல்லாமல் அனைத்து ஜீவராசிகளையும் முழுமனதுடன் நேசிக்கும் குணம் கொண்டிருப்பீர்கள். 

சாதுர்யமாக பேசிப் பல காரியங்களை சாதித்துக்கொள்ளும் நீங்கள் யாருக்காகவும் உங்களை மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். சுயகௌரவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும் இருப்பீர்கள். எவருக்கும் பயப்படாமல் கம்பீரமாகவும், நேர்மையாகவும் வாழ்வீர்கள். பெண் குழந்தைகளிடம் மிகுந்த பிரியம் கொண்டவராகவும் இருப்பீர்கள். உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் செய்யும் அன்பு குணம் உங்களிடம் இருக்கும். அவசியத் தேவையென்றால் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வீர்கள். குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக சொந்த சுகத்தைக்கூட தியாகம் செய்யக்கூடிய நல்லுள்ளம் படைத்த புனர்பூசம் நட்சத்திரக்காரர்களே உங்களுக்கு உரிய கோவில் எது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Temple for Punarpoosam Natchathiram | புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கோவில் எங்கு உள்ளது?Representative Image

புனர்பூசம் நட்சத்திர கோயில் [Punarpoosam Natchathiram Kovil]

புனர்பூசம் அல்லது புனர்வசு நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஜாதகத்தில் உள்ள பிரச்சனைகள் விலக செல்ல வேண்டிய ஆலயம் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் வாணியம்பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில். சிவபெருமானை மூலவராக கொண்ட இக்கோயிலுக்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று வருவதன் மூலம் வாழ்வில் பல திருப்பங்கள் நிகழ்வதோடு, செல்வ விருத்தியடையும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை கிடைப்பதில் சிரமம் உள்ளவர்கள் மற்றும் திருமணம் ரீதியான மற்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் இங்கு வழிபட்டால் நிச்சயம் நிவாரணம் கிடைக்கும். 

தல வரலாறு:

பிரம்மா ஒருமுறை சரஸ்வதி தேவியிடம் உலக உயிர்களை படைக்கும் நான் தான் பெரியவன்; அதனால் தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் என என்னுடைய பெயரை முதலில் வைத்து கூறுகிறார்கள் என்று கூறினார். இதைக்கேட்டு கலைமகளுக்கு சிரிப்பு வந்தது. கோபடைந்த பிரம்மா, வாணியை பேசும் சக்தியற்றவளாக மாறும்படி சாபமிட்டார். இதனால், சினம் கொண்ட அன்னை சரஸ்வதி தேவி சாபம் தீர சிருங்கேரி என்னும் தலத்தில் தவம் மேற்கொண்டாள். வாணியை பிரிந்த பிரம்மா, தேவர்களை திருப்திப்படுத்தி யாகம் செய்து, அவர்கள் மூலம் மனைவியை கண்டுபிடிக்க முயற்சித்தார். 

ஆனால், மனைவி இல்லாமல் செய்யும் யாகத்தின் பலனைத் தங்களால் பெற முடியாது என்று தேவர்கள் சொல்லிவிட்டனர். எனவே, பலதிசைகளிலும் தேடி, இறுதியாக சிருங்கேரியில் சரஸ்வதி தேவியை கண்டுபிடித்தார். அவளை சமரசம் செய்து அழைத்து செல்லும் வழியில் பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள சிவ ஆலயத்தில் தங்கினார்கள். இதனால் மகிழ்ச்சியடைந்த சிவனும், பார்வதியும் சரஸ்வதி தேவிக்கு அருள்புரிந்து பாடும்படி கூறினர். சரஸ்வதி தேவியும் பேசும் சக்தி பெற்று இனிய குரலில் பாடினாள். (கலை) வாணி பாடிய தலம் என்பதால், இவ்வூருக்கு 'வாணியம்பாடி' என்ற பெயர் வந்தது.

Temple for Punarpoosam Natchathiram | புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கோவில் எங்கு உள்ளது?Representative Image

தல சிறப்பு: 

சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாய்ந்த இக்கோயிலில் புனித காஷ்யப முனிவரின் மனைவியான அதிதி ஒவ்வொரு புனர்பூசம் தினத்திலும், விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டு தேவர்களை பெற்றார். இதனால் தான், இங்குள்ள சிவபெருமான் 'அதிதீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். மேலும், வாணி வழிபட்டு அருள் பெற்ற கோவில் என்பதால், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு இங்குள்ள வாணியை வழிபட்டு செல்வது சிறப்பு. அதுமட்டுமல்லாமல், ஓட்டல் தொழில் செய்பவர்கள், வியாபார விருத்திக் காக அதிதீஸ்வரரை வழிபாடு செய்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.

இந்த கோவிலின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், மேற்கு திசையை பார்த்தவாறு அமையப்பெற்ற இக்கோவிலை வழிபட்டால், ஆயிரம் கிழக்கு பார்த்த கோவிலை வழிபட்ட பலன் கிடைக்குமாம். இக்கோவிலில் அம்மன் பெரியநாயகி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். இங்குள்ள தட்சிணாமூர்த்தி மான், மழு ஏந்தி, யோக பட்டை, சின் முத்திரையுடன் நந்தி மீது அமர்ந்து காட்சி தருகிறார். 

திருவிழாக்கள்:

ஏப்ரல்-மே மாதங்களில் சித்திரை பிரம்மோத்ஸவம், பிப்ரவரி-மார்ச் மாதங்களில் மகாசிவராத்திரி மற்றும் டிசம்பர் - ஜனவரி மாதங்களில் மார்கழி திருவாதிரை ஆகியவை இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

கோவில் திறக்கும் நேரம்:

ஆலயம் காலை 06.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மீண்டும் மாலை 05.00 மணி முதல் 07.00 மணி வரையிலும் திறந்திருக்கும். எனவே, வெகு தொலைவில் இருந்து செல்ல நினைப்போர் இந்த நேரத்திற்கு ஆலயத்தை சென்றடையும் படி திட்டமிட்டுக்கொள்வது சிறந்தது. 

எப்படி செல்வது?

இக்கோயிலானது வாணியம்பாடி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கிமீ தூரத்திலும், வாணியம்பாடி ரயில் நிலையத்திலிருந்து 4 கிமீ தூரத்திலும், ஜோலார்பேட்டையிலிருந்து 20 கிமீ தூரத்திலும், திருப்பத்தூரிலிருந்து 23 கிமீ தூரத்திலும், வேலூரிலிருந்து 70 கிமீ தூரத்திலும் மற்றும் சென்னையில் இருந்து 206 கிமீ தூரத்திலும் உள்ளது. இக்கோயிலுக்கு ரயில் மூலமாக செல்வதாக இருந்தால் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை வந்தடைய வேண்டும்.

இருப்பிடம்: வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் 67 கிமீ தொலைவில் வாணியம்பாடி உள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து 3 கிமீ தூரத்தில் உள்ள பழைய வாணியம்பாடியில் இக்கோயில் அமைந்துள்ளது.

தொடர்புக்கு: +91 4174 226 652 / +91 99941 07395 / 93600 55022.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்