Tue ,May 28, 2024

சென்செக்ஸ் 75,390.50
-19.89sensex(-0.03%)
நிஃப்டி22,932.45
-24.65sensex(-0.11%)
USD
81.57
Exclusive

BJP Presidential Candidate 2022 : பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் இவரா? பரபரக்கும் அரசியல் களம்!!

Sekar June 09, 2022 & 17:09 [IST]
BJP Presidential Candidate 2022 : பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் இவரா? பரபரக்கும் அரசியல் களம்!!Representative Image.

BJP Presidential Candidate 2022 : இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், பாஜக யாரை வேட்பாளராக முன்மொழியும் என்ற எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது. குறிப்பாக சிஏஜி ஜி.சி.முர்முவை பாஜக முன்னிறுத்தும் என பரவலாக பேச்சு அடிபடுகிறது.

தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. கோவிந்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என பாஜக வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

தலித் வேட்பாளர்

இது பாஜக யாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற ஊகங்களுக்கு வழிவகுத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு குடியரசுத் தலைவர் பதவி வழங்க பாஜக ஒப்புக்கொண்டதால், உத்தரப் பிரதேசத் தேர்தலில் அவர் பாஜகவுக்கு எதிராக பெரிய அளவில் பிரச்சாரம் செய்யவில்லை எனக் கூறப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு, மாயாவதி குடியரசுத் தலைவர் பதவியில் ஆர்வம் காட்டவில்லை என்று அறிவித்தாலும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் இந்தக் கூற்றுகளைக் குறிப்பிட்டார்.

மாயாவதி இல்லை என்றாலும், ஒரு தலித் வேட்பாளரை பாஜக முன்னிறுத்துமா என்பது கேள்விக்குறிதான். 2017'இல் பாஜக சார்பில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக முன்மொழியப்பட்டு அவர் ஜனாதிபதி ஆகிவிட்ட நிலையில், இந்த முறை மீண்டும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு கிடைக்காது எனக் கூறப்படுகிறது.

முஸ்லீம் வேட்பாளர்

சமீப நாட்களாக, ஒரு முஸ்லீம் குடியரசுத் தலைவர் பதவிக்கு பிஜேபியால் பரிந்துரைக்கப்படலாம் என்று சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு, வரவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் மீண்டும் சீட் வழங்காததால், அவரை பாஜக முன்னிறுத்தலாம் அவளது கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் முன்னிறுத்தப்படலாம் என கருதபோபடுகிறது.

இதற்கிடையே, பாஜகவை பரம எதிரியாக பாவிக்கும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ சோம்நாத் பார்தி, ஆரிஃப் முகமது கான் குடியரசுத் தலைவர் பதவிக்கு வலுவான போட்டியாளர் என்று ட்வீட் செய்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஷா பானோ வழக்கில் அரசின் நடவடிக்கைக்கு உடன்படாமல் 1986ல் ராஜீவ் காந்தி அரசில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் ஆரிப் முகமது கான் முஸ்லீம்கள் மத்தியில் நவீனத்துவத்தின் குரலாகப் புகழ் பெற்றார். ஆரிப் முகமது கான் முத்தலாக் ஒழிப்புக்காக குரல் கொடுத்தவர்.

மேலும் முஹம்மது நபியைப் பற்றி பாஜக செய்தித் தொடர்பாளர்களின் கருத்துகளால் உருவாக்கப்பட்ட சர்ச்சையை அடுத்து முஸ்லீம் ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய வதந்திகள் வந்துள்ளன.

ஆரிஃப் முகமது கான், கடந்த செவ்வாயன்று நபிகள் நாயகம் பற்றிய கருத்துக்களுக்கு கத்தார் தெரிவித்த பொது மன்னிப்புக்கான கோரிக்கையை முக்கியமானதல்ல என்று நிராகரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் பாஜக தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பில் அப்துல் கலாம் எனும் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவரை ஜனாதிபதி ஆக்கி அழகு பார்த்துள்ளதால், இந்த முறை முஸ்லீம் வேட்பாளரை முன்மொழிய வாய்ப்பு குறைவு என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர்.

பழங்குடியின வேட்பாளர்

சுதந்திர இந்தியாவில் நீண்ட காலம் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களில் ஒன்றாக பழங்குடியினர் இருந்து வரும் நிலையில், நரேந்திர மோடி பிரதமரான பிறகு பழங்குடியினர் நிறைந்த வடகிழக்கு பிராந்தியத்தின் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்த முறை பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராக முன்மொழியப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் குறிப்பிட்டு சொல்லும்படி தற்போதைய சிஏஜி ஜி.சி.முர்மு உள்ளார். குஜராத்தில் 2001இல் நரேந்திர மோடி முதல்வராக பதவியேற்றபோது பூகம்பத்தால் நிலைகுலைந்த பகுதியின் துயர்நீக்கும் கமிஷனராக ஜி.சி.முர்மு இருந்தார். அவரது செயல்பாடுகள் மோடியை ஈர்த்த நிலையில், குஜராத் அரசின் முக்கிய அதிகாரிகளில் ஒருவராக மாறினார்.

2019இல் காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டபோது, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றார். பின்னர் 2020இல் இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக நியமிக்கப்பட்ட முர்மு தற்போது அந்த பதவியில் நீடித்து வருகிறார். அரசு நிர்வாக விஷயங்கள் அனைத்தும் இவருக்கு அத்துப்படி.

இந்தியாவின் மிகப்பெரும் பழங்குடியின சமூகங்களில் ஒன்றாக முண்டா சமூகத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், இவரை தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. முண்டா சமூகத்தினர் ஒடிஷா, சத்திஷ்கரில் தொடங்கி, வடக்கு, வடகிழக்கு மட்டுமல்லாது, வங்கதேசம், நேபாள் மற்றும் பூட்டானிலும் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய வேட்பாளர்

பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு இல்லை எனில் தற்போது துணைக் குடியரசுத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடு குடியரசுத் தலைவராக முன்னிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கையா குடியரசுத் தலைவராகும்பட்சத்தில், ஒரு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவருக்கு துணை குடியரசுத் தலைவர் பதவி நிச்சயம் வழங்கப்படும் என டெல்லி வட்டாரங்களில் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்