Fri ,Mar 01, 2024

சென்செக்ஸ் 73,745.35
1,245.05sensex(1.72%)
நிஃப்டி22,338.75
355.95sensex(1.62%)
USD
81.57
Exclusive

பாஜக வளர்ச்சிக்கு.. தீயாய் வேலை செய்யும் திமுக.. தொண்டர்கள் எச்சரிக்கை!!

Sekar June 25, 2022 & 18:40 [IST]
பாஜக வளர்ச்சிக்கு.. தீயாய் வேலை செய்யும் திமுக.. தொண்டர்கள் எச்சரிக்கை!!Representative Image.

சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தாலும், மக்கள் மன்றத்தில் தற்போது பிரதான எதிர்க்கட்சி எது என்றால் பலரும் பாஜக தான் எனக் கூறும் நிலைமையே உள்ளது. இந்நிலையில், திமுகவே திட்டமிட்டு பாஜகவை வளர்க்க பாஜகவுடன் போட்டி போட்டு செயல்படுவதாக திமுக தொண்டர்கள் அங்கலாய்க்கின்றனர்.

திராவிட மாடல் பயிற்சி பாசறை

முதல்வர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இயங்கும் திமுக இளைஞரணி தமிழகம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பாசறையை நடத்தி வருகிறது. இதன் மூலம் திராவிட சித்தாந்தம் குறித்து இளைஞர்களுக்கு கற்பிக்க உள்ளதாக கூறப்பட்டது. 

திமுகவின் எம்பிக்களான கனிமொழி, கலாநிதி வீராசாமி, செந்தில்குமார், அப்துல்லா, எம்எல்ஏக்கள் எழிலரசன், தாயகம் கவி, பரந்தாமன், எழிலன், செய்தி தொடர்பு இணை செயலர்கள் தமிழன் பிரசன்னா, ராஜிவ் காந்தி மற்றும் திமுக ஆதரவு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என 20 பேர், திராவிட மாடல் பயிற்சி பாசறையில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பர் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

பாஜக, ஆர்எஸ்எஸ் பற்றி மட்டுமே பேச்சு

திராவிட சித்தாந்தம், நீதிக்கட்சி, பெரியார், அண்ணா, கலைஞர் என இவர்களது பேச்சு இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், பயிற்சி பாசறையில் பேசும் அனைவருமே ஒருமணி நேர பேச்சில் முக்கால்வாசி நேரம் பாஜக, ஆர்எஸ்எஸ், மோடி, அமித் ஷா என சதா பாஜக குறித்தே பேசுவதாகவும், சொற்ப நேரம் மட்டுமே திமுக மற்றும் அதன் தலைவர்கள், சித்தாந்தம் என பேசுவதாகக் கூறப்படுகிறது.

பாஜக, ஆர்எஸ்எஸ், சங் பரிவார் அமைப்புகளால் தமிழ், தமிழர், தமிழ்நாடு என அனைத்திற்கும் ஆபத்து என அவர்கள் பேசுவதை திமுக நிர்வாகிகள் வேண்டுமானால் ரசிக்கலாம், ஆனால் இன்றைய டிஜிட்டல் உலகில் தகவலை விரல்நுனியில் பெறும் இளைஞர்களும் கல்லூரி மாணவர்களும் ரசிக்கவில்லை என்பதே அங்கிருந்து கிடைக்கும் தகவலாக உள்ளது.

பாஜகவை வளர்த்து விடுகிறதா திமுக?

சதா பாஜக, ஆர்எஸ்எஸ், சங் பரிவார் என பேசுவதால் இது திராவிட சித்தாந்தம் குறித்த பயிற்சி கூட்டமா இல்லை பாஜக வெறுப்புதான் திராவிட சித்தாந்தமா என அங்கிருந்த இளைஞர்கள் பலர் நேரடியாகவே கேட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கு, மத்தியில் அசுர பலத்துடன் பாஜக ஆட்சியில் இருப்பதோடு, அது தான் சித்தாந்த ரீதியில் பாஜகவுக்கு எதிரி என கட்சி நிர்வாகிகள் கூறினாலும், அது பெரிய அளவில் எடுபடவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும், திமுக அரசின் சாதனைகளை பகிர்வதை விட, பாஜக குறித்தே எந்நேரமும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

தமிழகத்தில் கோவை, கன்னியாகுமரி போன்ற ஒரு சில இடங்களில் மட்டுமே தற்போது செல்வாக்கைக் கொண்டுள்ள பாஜகவை, திமுக நிர்வாகிகளின் செயல் அனைத்து மட்டங்களிலும், திமுகவிற்கு மாற்று பாஜக என பேசவைத்து விடும் என அரசியலில் ஊறித் திளைத்த திமுகவினர் பலரும் கூறுகின்றனர். இல்லை ஒருவேளை திமுக தலைமையே தமிழகத்தில் மூளை முடுக்கெல்லாம் பாஜகவை கொண்டு சேர்க்கும் வேலையை செய்கிறதா எனவும் அவர்கள் சந்தேகம் கிளப்புகின்றனர்.   

முன்பு திமுக ஆட்சியில் இல்லாத காலங்களில், கலைஞர் கருணாநிதி தனது இருப்பை உறுதி செய்யும் வகையில் தினசரி பேட்டி, அறிக்கை, போராட்டம் என ஏதோ ஒரு வகையில் மக்களிடம் திமுகவின் பெயரை பதிய வைத்துக் கொண்டே இருப்பார். தற்போது பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையும் அதையே தான் செய்கிறார் என்ற போதிலும், அண்ணாமலைக்கு ஆதரவை அதிகரிக்கும் வகையில் திமுக அமைச்சர்கள் முதல் முக்கிய நிர்வாகிகள் பலர் செயல்படுவதாக கட்சியினர் கூறுகின்றனர்.

பாஜக வளர்வது திமுகவின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்றும், எப்போதும் பாஜக குறித்தே திமுக நிர்வாகிகள் பேசிக்கொண்டிருப்பதற்கு தலைவர் ஸ்டாலின் கடிவாளம் போட வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்