Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி கைது - அமலாக்கத்துறை சோதனைக்குப்பின் அதிகாரிகள் அதிரடி! | senthil balaji arrest

Saraswathi Updated:
தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி கைது - அமலாக்கத்துறை சோதனைக்குப்பின் அதிகாரிகள் அதிரடி! | senthil balaji arrestRepresentative Image.

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, கரூரில் உள்ள அவரது இல்லம் மற்றும் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற பல மணி நேர சோதனையைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளது. 

தமிழக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சராக பதவி வகித்துவருபவர் அமைச்சர் செந்தில்பாலாஜி. கொங்குமண்டலத்தின் குறிப்பிடத்தக்க நபராக திமுகவில் வலம்வந்த அமைச்சர் செந்தில்பாலாஜி மீது டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களுக்கு ரூ.10 அதிகமாக வாங்குவது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை பல்வேறு தரப்பினரும் எழுப்பி வந்தனர். 

இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூர், கோவை உட்பட தமிழகத்தின் பல இடங்களிலும் செந்தில்பாலாஜியின் சகோதரர் வீடு, உறவினர்கள், நண்பர்களின் வீடு, நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, செந்தில்பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனையிடச் சென்ற அதிகாரிகள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. 

எட்டு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற அந்தச் சோதனையில் முறைகேடு நடைபெற்றதற்கான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாயின. 

இந்த நிலையில், நேற்று காலை சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் இல்லம், கரூரில் உள்ள அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னையில் அவரது இல்லத்தில் ஒரு குழுவும், தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அறையில் மற்றொரு குழுவும் என அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மத்திய துணை ராணுவப் படை பாதுகாப்புடன் சுமார் 18 மணி நேரம் நடைபெற்ற சோதனை இன்று அதிகாலை நிறைவடைந்தது. இதேபோல், தலைமைச்செயலகத்தில் 13 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் 3 தோல்பைகள் மற்றும் 2 கைப்பைகளில் அதிகாரிகள் ஆவணங்களை எடுத்துச் சென்றனர். அதுதவிர ஒரு ஹார்ட்டிஸ்க் மற்றும் லேப்டாப் ஒன்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து,  அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், வீட்டில் உள்ளவர்கள் அவரைப் பார்க்கவும் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது,  அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்