Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எடப்பாடியாருடன் நெருங்கும் ராகுல் காந்தி.. அலெர்ட்டாகும் திமுக.. அடுத்து என்ன?

Sekar July 03, 2022 & 09:38 [IST]
எடப்பாடியாருடன் நெருங்கும் ராகுல் காந்தி.. அலெர்ட்டாகும் திமுக.. அடுத்து என்ன?Representative Image.

அதிமுகவில் எடப்பாடியார் ஒற்றைத் தலைவராக உருவெடுப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எடப்பாடி பழனிச்சாமியிடம் தொடர்பில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் திமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதிமுக உட்கட்சி மோதல்

அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல்வேறு குழப்பங்கள் நடந்து இறுதியில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரட்டைக்குழல் துப்பாக்கியாக இருவரும் கட்சியை வழிநடத்தி வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என இபிஎஸ் ஆதரவாளர்கள் பற்ற வைத்த நெருப்பு தீயாய் பரவி விட்டது.

இது கட்சிக்குள் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்த குழப்பத்தால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக தொண்டர்கள் சுயேட்சையாக போட்டியிடும் நிலைமைக்கு தள்ளியது. இந்நிலையில் கட்சிக்குள் இபிஎஸ் பிடி அதிகரித்து விட்ட நிலையில், ஓபிஎஸ் தரப்புக்கு இபிஎஸ் தலைமைக்கு ஆதரவு கொடுக்க வேண்டும், அல்லது கட்சியை இரண்டாக பிளக்க வேண்டும் என இரண்டு வழிகள் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது.

எடப்பாடியாருடன் நெருங்கும் ராகுல் காந்தி

அதிமுக உட்கட்சி களேபரங்கள் ஒருபுறம் இருக்க, அகில இந்திய காங்கிரஸ் தலைமை சமீபத்தில் விடுதலையான பேரறிவாளனை அரசியலமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ள முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சந்தித்து வரவேற்றதை ரசிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் அண்ணாமலை வந்த பிறகு கத்துக்குட்டியாக இருந்த பாஜக விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பாஜக வளர்ச்சி அதிமுகவுக்கும் தனக்கும் பாதகமான சூழலை ஏற்படுத்திவிடும் என இபிஎஸ் தரப்பு கருதுவதாக கூறப்படுகிறது.

அதிமுக உட்கட்சி மோதலில் இபிஎஸ் கை ஓங்கியுள்ள நிலையில், திமுகவின் செயலால் கோபத்தில் உள்ள காங்கிரஸ் தலைமை இனி வரும் காலங்களில் திமுகவுடன் சிக்கல் ஏற்பட்டு கூட்டணி முறிந்தால் ஒரு மாற்று வேண்டும் என்பதற்காக எடப்பாடியாருடன் தொடர்ந்து நல்ல நட்புறவில் இருக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால் ஒருசிலமுறை ராகுல் காந்தியே நேரடியாக எடப்பாடியாருக்கு போன் போட்டு பேசியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. முன்னர் அதிமுகவுக்கு தேர்தல் வியூக நிபுணராக இருந்த சுனில் தற்போது காங்கிரசின் தேர்தல் வியூகத்தை வகுக்கும் பொறுப்பை மேற்கொண்டு வருகிறார். அவர் தான் ராகுலிடம் பேசி இந்த முன்னெடுப்பை செய்ததாகத் தெரிகிறது.

மேலும் ராகுலுக்கு நெருக்கமாக உள்ள இரண்டு காங்கிரஸ் எம்பிக்களும் இதே கருத்தை ஆமோதித்ததால், உடனடியாக களத்தில் இறங்கிய ராகுல் எடப்பாடியாருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாக தெரிகிறது.

திமுகவுக்கு என்ன சிக்கல்?

10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருந்த திமுக, தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் உதவியால் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், 1999-2014 போல் மத்திய அரசிலும் கோலோச்ச திமுக திட்டமிட்டு வருகிறது. 

2026 தேர்தலில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்க வேண்டும் என்ற திட்டத்துடன் திமுகவை எதிர்த்து பாஜக மிகத் தீவிரமாக அரசியல் செய்து வரும் நிலையில், பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்பதால், 2024 தேர்தலில் காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்க வாய்ப்பில்லை என்றாலும், தொங்கு பாராளுமன்றம் அமைந்து கூட்டணி அரசு அமையும்பட்சத்தில் மத்திய அரசின் முக்கிய பங்கு வகிக்க நினைக்கும் திமுக, அதற்கு காங்கிரஸையே மலைபோல் நம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், எடப்பாடியாருடன் ராகுல் காந்தி நெருக்கம் காட்ட ஆரம்பித்துள்ள தகவல் திமுக தலைமைக்கு ஏற்கனவே கசிந்துவிட்டதாகவும், இதற்கு முட்டுக்கட்டை போட என்ன செய்யலாம் என திமுக ஆலோசித்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்