Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு.. தலைதூக்கும் கோரிக்கை.. செவிசாய்க்குமா அரசு?

Sekar October 14, 2022 & 16:08 [IST]
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு.. தலைதூக்கும் கோரிக்கை.. செவிசாய்க்குமா அரசு?Representative Image.

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி இன்று மாலை மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இதையொட்டி இன்று நாம் தமிழர் கட்சியினர் ட்விட்டரில் #CasteBasedCensus  என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு முறையும் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அப்போது சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. எனினும் இந்த கணக்கெடுப்பு சாதிவாரியாக இல்லாமல் இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின என்ற அளவிலேயே இருக்கிறது. 

தற்போது இட ஒதுக்கீடு முறை ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி என வகுப்புவாரியாக வழங்கி சமூக நீதி நிலைநாட்டப்படுவதாக கூறப்பட்டு வந்தாலும், ஒவ்வொரு வகுப்பிலும், இடம் பெற்றுள்ள அனைத்து சாதியினரும் உரிய பிரதிநிதித்துவம் பெருகிறார்களா என்பது கேள்விக்குறிதான். அதுகுறித்த எந்த தரவுகளும் பொதுவெளியில் இல்லை.

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம், அருந்ததியர் இட ஒதுக்கீடு போராட்டத்தின் பின்னணியின் ஆரம்பப் புள்ளியும் இது தான் என்றும் கூறலாம். பிசி, எம்பிசி, எஸ்சி என்ற பட்டியலில் இருந்தாலும் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்ற கருத்தே பல்வேறு சமூகங்களிலும் நிலவுகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு பிரிட்டிஷ் இந்தியாவில் கடைசியாக 1931 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கு பிறகு 2011இல் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அந்த கணக்கெடுப்பை மத்திய அரசு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவில்லை. இதேபோல் 2011இல் கர்நாடக அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொண்டாலும் அதை பொதுவெளியில் வைக்கவில்லை.

ஒவ்வொரு சாதியும் எவ்வளவு மக்கள்தொகையைக் கொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்வது, அனைத்து சாதியினருக்கும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கேற்ற வகையில் இடஒதுக்கீடு கொள்கையை மாற்றியமைக்க உதவும் என்று பல்வேறு சமூகங்களின் தலைவர்கள் கூறிவருகிறார்கள். 

இது தற்போது அரசியல் மட்டத்திலும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாகவே, பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் அங்குள்ள அனைத்து கட்சிகளையும், ஒருங்கிணைத்து 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பில் விரிவான சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். 

தமிழகத்திலும், தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பல்வேறு தலைவர்களும் சமீபகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக நாம் தமிழர் கட்சி இன்று மாலை மதுரையில் குடிவாரி கணக்கெடுப்பு எனும் சாதி வாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவுக் குரல் அதிகரித்து வந்தாலும், சாதிவாரி கணக்கெடுப்பு மக்களிடம் சாதியவாதத்தை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்றும், சாதிய வேறுபாடுகளை ஒழிக்க வேண்டிய நாம் சாதியவாதத்தை அதிகரிக்கும் வகையில் செயல்படலாமா என்ற கருத்தும் எழாமல் இல்லை.

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தலாமா கூடாதா? நீங்க என்ன நினைக்கிறீங்க?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்