Tue ,Jun 18, 2024

சென்செக்ஸ் 77,197.53
204.76sensex(0.27%)
நிஃப்டி23,526.85
61.25sensex(0.26%)
USD
81.57
Exclusive

ஆளுநருக்கு இனி பதவியில் நீடிக்கும் தகுதியில்லை... ஒரே போடாய் போட்ட திருமா! 

KANIMOZHI Updated:
ஆளுநருக்கு இனி பதவியில் நீடிக்கும் தகுதியில்லை... ஒரே போடாய் போட்ட திருமா! Representative Image.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் சட்டப்பேரவை மற்றும்  தேசிய கீதத்தையும் ஆளுநர் அவமதித்துள்ளார். எனவே ஆளுநர் பதவியில் நீடிக்கும் தகுதியை அவர் இழந்துவிட்டார் என ஆளுநர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் இன்று சட்டப்பேரவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் அவை மரபுகளையும் அவமதித்ததோடு அரசியலமைப்புச் சட்டத்தையும் மீறி இருக்கின்றார். அவர் தனது உரையில் சிலவற்றைத் தவிர்த்தும் சிலவற்றை இணைத்தும் அவை மரபுகளுக்கு மாறாகப் பேசியியிருக்கிறார். அம்பேத்கர், பெரியார் போன்ற மக்கள்  தலைவர்களின் பெயர்களை உச்சரிக்காமலும் தமிழ்நாடு, திராவிடம் போன்ற பல சொற்களை தவிர்த்தும் தனது விருப்பப்படி சில கருத்துக்களை இணைத்தும் ஆளுநர் உரையைப் படித்திருக்கின்றார். இது அவை மரபுகளை மீறிய நடவடிக்கையாகும். அத்துடன், அரசியலமைப்புச் சட்டம்  அவருக்கு அளித்துள்ள அதிகாரவரம்புகளையும்  மீறிய நடவடிக்கையாகும். இதன் மூலம் அவர் அரசியலமைப்புச் சட்டத்தையும்  அவமதித்திருக்கிறார். எனவே, அவர் ஆளுநராகப் பதவியில் தொடரும் தகுதியை இழந்துவிட்டார். அவரை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அவரை பதவியிலிருந்து வெளியேற்ற உரிய சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு அரசையும் கேட்டுக் கொள்கிறோம். 

இவர் ஆளுநராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராகவே செயல்பட்டு வருகிறார்.  இது அவரது தனிப்பட்ட நடவடிக்கை என்பதைவிட 'ஆர்எஸ்எஸின் திட்டமிட்ட நடவடிக்கையே'  என்பது தெளிவாகிறது. 

அதாவது, மாநில அரசுக்கும் இந்திய ஒன்றிய அரசுக்குமிடையில் முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தி, தமிழ்நாட்டில் அரசியல் குழப்பத்தை உருவாக்குவதே சங்பரிவார்களின் நோக்கமாகும். அதன்மூலம்,  தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைப்பதே அவர்களின் சதியாகும். அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் சட்டப்பேரவையில் அவருடைய  இன்றைய உரையும் இதர நடவடிக்கைகளும் இருக்கின்றன. இதனை இனிமேலும் தமிழ்நாட்டு மக்களால் பொறுத்துக் கொள்ள இயலாது. தமிழ்நாட்டு மக்களை அவமதித்துவிட்டு தமிழ்நாட்டில் ஆளுநராக அவர் பதவியில் தொடர்வது ஏற்புடையதல்ல. அவர் ஆர்.எஸ்.எஸ் தொண்டராகச் செயல்பட விரும்பினால் ஆளுநர் பதவியிலிருந்து விலகிவிட்டு அதைச் செய்யவேண்டும். 

தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பெயர்களை உச்சரிக்காமல் தவிர்த்ததோடு சமூக நீதி, சமத்துவம், திராவிடம், தமிழ்நாடு முதலான சொற்களையும் அவர் உச்சரிக்க மறுத்திருக்கிறார். ஏற்கனவே தயாரிக்கப்பட்டு அச்சிடப்பட்ட உரையில் இல்லாத சில வார்த்தைகளைச் சேர்த்துப் பேசி இருக்கிறார். தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாகவே அவர் அவையில் இருந்து வெளியேறியிருப்பது அதனையும் அவமதிப்பதாகவே உள்ளது. 

ஆளுநரை நியமிக்கும் போது பிரதமர், குடியரசு தலைவர், மக்களவைத் தலைவர், மாநில முதலமைச்சர் கொண்ட குழு சேர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும்;
அவர் ஒரு மாநில அரசு நிறைவேற்றி தரும் சட்ட மசோதாக்களை குறிப்பிட்ட காலத்துக்கு மேல் கிடப்பில் வைத்திருக்கக் கூடாது என்றெல்லாம் அரசியல் அமைப்புச் சட்ட உறுப்புகள் 155, 156 200 மற்றும் 201 ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று சர்க்காரியா கமிஷனும், அதற்கு பின்பு அமைக்கப்பட்ட நீதிபதி வெங்கடாசலையா கமிஷனும் பரிந்துரைத்திருக்கின்றன. அவற்றை ஒன்றிய அரசு நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். 


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்