Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி - அறுவை சிகிச்சை எப்போது..?

Saraswathi Updated:
காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி - அறுவை சிகிச்சை எப்போது..?Representative Image.

சென்னை உயர்நீதிமன்ற அனுமதியின் பேரில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி, நேற்றிரவு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 3 இடங்களில் அடைப்பு இருப்பதால் உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, அமைச்சர் செந்தில்பாலாஜியை காவேரி மருத்துவனைக்கு மாற்ற அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று பிற்பகலில் விசாரித்த உயர்நீதிமன்றம் அமைச்சர் செந்தில்பாலாஜியை மேல்சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து, காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி மேற்பார்வையில் சிறைத்துறை காவலர்கள் செய்தனர். அதன்படி, காவேரி மருத்துவமனையின் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் நேற்றிரவு 9.15 மணி அளவில் ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

அமலாக்கத்துறையால் கைதாகியுள்ள அமைச்சருக்கு வரும் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளதால்,  ஓமந்தூரார் மருத்துவமனை மற்றும் காவேரி மருத்துவமனை ஆகிய இரு இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில்பாலாஜியை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் சுமார் 8 நிமிடங்களில் காவேரி மருத்துவமனையை அடைந்தது.

தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்துவரும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, உடல்நிலை பரிசோதனையை மருத்துவர்கள் மேற்கொண்ட பிறகு, விரைவில் இதய அறுவை சிகிச்சை செய்வதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்