Tue ,Apr 23, 2024

சென்செக்ஸ் 73,917.31
268.69sensex(0.36%)
நிஃப்டி22,409.95
73.55sensex(0.33%)
USD
81.57
Exclusive

மாங்கல்ய தோஷத்தை போக்கும் பரிகாரக் கோயில் எங்கு உள்ளது? | Mangalya Dosham Pariharam Temple

Nandhinipriya Ganeshan Updated:
மாங்கல்ய தோஷத்தை போக்கும் பரிகாரக் கோயில் எங்கு உள்ளது? | Mangalya Dosham Pariharam TempleRepresentative Image.

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன?

திருமணம் என்பது ஆண், பெண் இருவர்களின் வாழ்க்கையிலும் திருப்பு முனையை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகும். அந்த திருப்பு முனை சிறப்பாகவும் இருக்கலாம், அதற்கு மாறாகவும் இருக்கலாம். இருப்பினும், தோஷம் இருப்பவர்களை திருமணம் செய்வதாலும் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். பொதுவாக, நாம் சென்ற ஜென்மத்தில் பிறருக்கு செய்த துன்பம் தான் மற்றொரு ஜென்மத்தில் தோஷமாக வரும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. தோஷங்களில் களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம், ராகு, கேது தோஷம், மாங்கல்ய தோஷம் என பல தோஷங்கள் இருக்கின்றன. 

ஒரு பெண் ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானமான எட்டாமிடத்தில் சனியும் சூரியனும் நிற்பது மாங்கல்ய தோஷம். ஆயுள் ஸ்தானத்தில் நிச சுக்கிரன், சூரியனுடன் நிற்பதும் மாங்கல்ய தோஷம். எட்டாமிடத்தில் சூரியன் செவ்வாயுடன் சேர்ந்து இருந்தாலும் மாங்கல்ய தோஷமே. எட்டாமிடத்தில் சனி நிற்க அதை செவ்வாய் சூரியன், ராகு, கேது பார்ப்பதும் தோஷமே. இதனால் பெண்களுக்கு திருமணமாவதில் தடை நீடித்துக் கொண்டே இருக்கும். 

இருப்பினும், இந்த தோஷத்திற்கு உரிய பரிகாரக் கோயிலுக்கு செல்வதன் மூலம் தோஷத்தின் தாக்கம் குறைந்து திருமணம் பாக்கியம் கிடைக்கும். அதோடு, திருமணமான பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர். சரி வாங்க மாங்கல்ய தோஷத்தை போக்கும் பரிகார கோயில் எங்குள்ளது, அதன் சிறப்புகள் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.

மாங்கல்ய தோஷத்தை போக்கும் பரிகாரக் கோயில் எங்கு உள்ளது? | Mangalya Dosham Pariharam TempleRepresentative Image

திருமங்கலக்குடி தலம்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஆடுதுறைக்கு வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த திருமங்கலக்குடி தலம். இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் பெயர் பிராணநாதேஸ்வரர். இவரை 'மங்களநாத' என்றும் அழைப்பார்கள். மங்களாம்பிகை உடனாய பிராணநாதேஸ்வரர் திருக்கோயில் 'பஞ்ச மங்கள் ஷேத்திரம்' என்றும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால், ஊரின் பெயர் திருமங்கலக்குடி என்றும், அம்பாளின் பெயர் மங்களாம்பிகை என்றும், தல விநாயகரின் பெயர் மங்கள விநாயகர் என்றும், கோவில் விமானம் மங்கள விமானம் என்றும், மற்றும் தீர்த்தம் மங்களம் தீர்த்தம் என்றும் இருப்பதால், இந்த தலம் 'பஞ்ச மங்கள் ஷேத்திரம்' என்றானது.

தல வரலாறு:

எமனுடன் போராடி தன் கணவன் சத்தியவான் உயிரை மீட்டாள் சாவித்திரி. ஆனால் இன்னொரு பெண்ணோ இறைவனுடன் போராடி தன் கணவனை மீட்டாள். அதுவே இக்கோயிலின் தல வரலாறாகும். முதலாம் குலோத்துங்க சோழனிடம், அலைவாணர் என்ற அமைச்சர் இருந்தார். சிவபெருமானின் தீவிர பக்தனான இவர் தான் வணங்கும் சிவபெருமானுக்கு தான் வசிக்கும் திருமங்கலக்குடியில் ஒரு ஆலயம் ஒன்றை அமைக்க நினைத்தார். ஆனால், அதற்கு நிறையப் பணம் தேவைப்பட்டது. 

இதற்காக, அவர் தவறு என்று தெரிந்தும் சிவபெருமானின் மீதுள்ள அளவில்லா பக்தியால், தனது அரசனின் அனுமதியின்றி கஜானாவுக்கு செல்ல வேண்டிய வரி பணம் முழுவதையும், கோயில் கட்டுவதற்காக செலவழிக்கத் தொடங்கினார். கோயிலும் கட்டி முடிக்கப்பட்டது. இந்த விஷயம் எப்படியோ அரசனுக்கு தெரியவர, உடனே அலைவாணரின் தலையை துண்டிக்கும்படி ஆணையிட்டார். ஆனால், அதற்கு முன்பாகவே அமைச்சர் தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டார்.

கணவனின் முடிவை அறிந்த அவரது மனைவி, அவர் கட்டிய கோவிலில் உள்ள இறைவனிடமும், இறைவியிடமும் கண்ணீர் பெருக கதறி அழுதாள். தனது கணவனுக்கு உயிர்ப்பிச்சை தருமாறு இறைவனிடம் மன்றாடினாள். அவளுடைய பிராத்தனையை கேட்டு மனமிறங்கிய இறைவனும், இறைவியும் இறந்து போன அலைவாணரை மீண்டும் உயிர்பிழைக்க செய்தனர். விதவையான அமைச்சர் மனைவிக்கு மங்கல்ய பாக்கியத்தை திருப்பிக் கொடுத்ததால், அம்மன் 'ஸ்ரீ மங்கள நாயகி' என்றும், தன் பக்தனுக்கு மீண்டும் பிராணனை அருளி உயிர்ப்பித்ததால் இறைவன் 'ஸ்ரீ பிராணநாதேஸ்வரர்' என்றும் போற்றப்படுகிறார்கள்.

மாங்கல்ய தோஷத்தை போக்கும் பரிகாரக் கோயில் எங்கு உள்ளது? | Mangalya Dosham Pariharam TempleRepresentative Image

கோயிலில் உள்ள தெய்வங்கள்:

இக்கோயிலில் சிவன், பார்வதி தேவி சன்னதிகள் தவிர, விநாயகர், முருகன், கஜலட்சுமி, பைரவர், சிவகாமியுடன் கூடிய இரு நடராஜர், சந்திரசேகரர், அகஸ்திய லிங்கம், நால்வர், ஹரதத்தர், மெய்க்கண்டார் ஆகியோரின் சன்னதிகளும், சிலைகளும் மாடவீதியில் காணப்படுகின்றன. இங்கு நவக்கிரகம் இல்லை. நடைபாதையில், 11 சிவலிங்கங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. கருவறையை சுற்றியுள்ள இடத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, ரிஷ்பரூதர், பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோரின் சிலைகளைக் காணலாம். மேலும், நடராஜர் சன்னதியில் மரகத (மரகத) லிங்கம் உள்ளது. இன்னொரு சிறப்பு என்னவென்றால், இக்கோயிலில் மிகவும் அரிதான புனித நதியான காவிரிக்கு சிலை உள்ளது.

கோயிலின் சிறப்பு:

பார்வதி தேவி, காளி, பூமாதேவி, ஆகாசவாணி, சூரியன், மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் அகஸ்தியர் முனிவர்கள் இங்குள்ள சிவனை வழிபட்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சிவபெருமானின் இரு கண்களாகக் கருதப்படும் சூரியன், சந்திரம் இருவரும் சூரிய தீர்த்தம் மற்றும் சந்திர தீர்த்தம் என இரண்டு புனித தீர்த்தம் வடிவில் இருக்கின்றன. இந்தக் கோயிலின் தல விருட்சமாக கோங்கு, வெள்ளெருக்கு ஆகிய மரங்கள் இருக்கின்றன. இக்கோயில் மங்களநாயகி அம்பாளின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு இருக்கும். அம்பாளை வழிபடும் பெண்களுக்கு தாலிக்கயிறு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்றும், ஏற்கனவே திருமணமானவர்கள் நீண்ட ஆயுளுடன் தீர்க்க சுமங்கலியாக செழிப்புடம் வாழ்வார்கள் என்றும் நம்பப்படுகிறது. 

மாங்கல்ய தோஷத்தை போக்கும் பரிகாரக் கோயில் எங்கு உள்ளது? | Mangalya Dosham Pariharam TempleRepresentative Image

வழிபாடு: 

பக்தர்கள் இங்கு 11 ஞாயிற்றுக்கிழமைகள் சிவனை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஏனென்றால், 11 ஞாயிற்றுக்கிழமைகள் அர்ச்சனை செய்து வந்தால், நவக்கிரக தோஷம், பூர்வஜென்ம தோஷம் அனைத்தும் விலகும். அதேபோல், மங்களாம்பிகைக்கு ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டால் மாங்கல்ய தோஷமும், களத்திர தோஷமும் அகலும். வழிபாட்டிற்கு பிறகு, இக்கோயிலின் புனித மரமான வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், முற்பிறவியில் ஏற்பட்ட பாவங்கள் மற்றும் சாபங்கள் நீங்கும் என்ற நம்பிக்கையுடன் அமாவாசை நாளில் அகஸ்திய லிங்கத்திற்கு பூஜை நடத்தப்படுகிறது.

கோவில் நேரங்கள்:

காலை 06:30 முதல் மதியம் 12:30 வரை மற்றும் மாலை 04:00 முதல் இரவு 08:30 வரை.

கோவில் முகவரி:

ஸ்ரீ பிராண நாதேஸ்வரர் கோவில்,
திருமங்கலக்குடி அஞ்சல்,
திருவிடைமருதூர் தாலுக்கா,
தஞ்சாவூர் மாவட்டம்.
தமிழ்நாடு - 612 102.
தொலைபேசி: +91 0435 247 0480.

செல்லும் வழி:

கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ள ஆடுதுறையை அடைந்து, அங்கிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் சென்றால், திருமங்கலக்குடியை அடையலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்