Sun ,Oct 27, 2024

சென்செக்ஸ் 79,402.29
-662.87sensex(-0.83%)
நிஃப்டி24,180.80
-218.60sensex(-0.90%)
USD
81.57
Exclusive

'கம்பன் சொல்ல வந்து' பாடலின் அர்த்தம் - சீதா ராமம்...

Nandhinipriya Ganeshan October 05, 2022 & 12:20 [IST]
'கம்பன் சொல்ல வந்து' பாடலின் அர்த்தம் - சீதா ராமம்...Representative Image.

Kamban Solla Vanthu Song Meaning in Tamil: இயக்குநர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் சீதா ராமம். இந்த படத்தில் வரும் 'கம்பன் சொல்ல வந்து' என்ற பாடல் அனைவரது மனதையும் கொள்ளையடுத்து விட்டது. சமீப காலங்களில் வெளிவந்த ஒரு அழகிய பாடல் இது என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால், இசையும் குரலும் அந்த அளவிற்கு அற்புதமாய் அமைந்துள்ளன. வரிகள் அனைத்தும் கேட்போரை மயங்கச் செய்கிறது. இந்த அழகிய பாடலுக்கு குரல் கொடுத்தவர் சாய் விக்னேஷ் எனும் பாடகர். இசையமைத்தவர் விஷால் சந்திரசேகர். பாடல் வரிகளை எழுதியவர் மதன் கார்கி. இப்போது இந்த பாடலின் அர்த்தத்தை பார்க்கலாம். 

"குருமுகில்களை சிறுமுகைகளில் 
யார் தூவினார் மழைகொண்டு கவிதை தீட்டினார்

இளம்பிறையினை இதழ் இடையினில் 
யார் சூட்டினார் சிரித்திடும் சிலையை காட்டினார்"

'மொட்டுகளில் நீர்த்துளிகளை தூவியது யார்' என்ற கேள்வியை முதலில் முன்வைக்கும் பாடலாசிரியர் அடுத்த வினாடியே 'மழைக்கொண்டு கவிதை தீட்டிவைத்துள்ளார்கள்' என்று சொல்கிறார். அப்படியே அடுத்த வரிக்குச் சென்றால், 'இளம்பிறையை உன் இதழ் இடையில் யார் சூட்டியது' என்று கேள்வி கேட்டு அவரே, 'சிரித்திடும் சிலையை காட்டினார்' என்று கூறுகிறார். இதில் பாடலாசிரியர் கூறும் அனைத்தும் சீதாவுக்கு பொருந்திப்போகும்.

Vijay Horoscope | அரசியலுக்கு வரப்போவது உறுதி.. விஜய் ஜாதகம் சொல்வது என்ன?

'கம்பன் சொல்ல வந்து' பாடலின் அர்த்தம் - சீதா ராமம்...Representative Image

"எறும்புகள் சுமந்து போகுதே 
சர்க்கரை பாறை ஒன்றினை
இருதயம் சுமந்து போகுதே 
இனிக்கிற காதல் ஒன்றினை

என் சின்ன நெஞ்சின் மீது 
இன்ப பாரமே ஏற்றி வைத்ததார்"

இப்போது ராம் அடைந்திருக்கும் மகிழ்ச்சியை அவ்வளவு எளிதில் யாராலும் விவரித்திட முடியாது. ஆனாலும், அதை ஒரு காட்சி படிமத்தின் வழியாக அழகாக விளக்குகிறார். அதுவே, 'எறும்புகள் சுமந்து போகுதே சர்க்கரை பாறை ஒன்றினை' என்ற வரி. இதை போலவே அடுத்த வரியில் 'இருதயம் சுமந்து போகுதே இனிக்கிற காதல் ஒன்றினை' என்று ராம் உடைய மனதை வெளிக்கொணர்ந்து காட்டுகிறார். பின்னர், 'என் சின்ன நெஞ்சின் மீது இன்ப பாரமே ஏற்றி வைத்தது யார்' என்று ராம் பாடுவது போல காட்டியுள்ளார்.

"முயல் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா 
வானோடு தீட்டி வைத்ததார்
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே 
நிலாவை கூட்டி வந்ததார்"

இந்த வரியில் 'முயல் மயில் குயில்கள் காணும் நிலாவை வானத்தில் தீட்டி வைத்தது யார்' என்று கேட்டு, பின்னர் 'தரையில் ஆடுகின்ற இந்த நிலாவை கூட்டி வந்தது யார்' என்று சீதாவை நிலாவுடன் ஒப்பிட்டு அழகாய் வர்ணித்துள்ளார் பாடலாசிரியர்.  

'கம்பன் சொல்ல வந்து' பாடலின் அர்த்தம் - சீதா ராமம்...Representative Image

"கம்பன் சொல்ல வந்து 
ஆனால் கூச்சங்கொண்டு 
எழுதா ஓர் உவமை நீ

வர்ணம் சேர்க்கும்போது 
வர்மன் போதை கொள்ள 
முடியா ஓவியமும் நீ"

இதன் பின்பு, ராம் சீதாவை வருணிக்க முற்படுகிறான். அந்த வரியே எல்லோருக்கும் மிகவும் பிடித்த வரிகள். 'கவிஞன் கம்பன் சொல்ல வந்தும், தனது கூச்சத்தால் எழுதாத சொல்லாத ஓர் உவமை அவள்'  என்றும், 'ரவிவர்மன் எனும் ஓவியக் கலைஞன் சீதாவை வரையும்போது வர்ணம் சேர்க்க முயற்சிக்கும் போது வர்மனையும் போதைக்கொள்ள செய்யும் அழகு அவள்' என்று சீதாவின் அழகை வர்ணிக்கிறான் ராம்.

"எலோரா சிற்பங்கள் 
உன் மீது காதலுறும்
உயிரே இல்லாத 
கல் கூட காமமுறும்

உன் மீது காதல் கொண்ட
மானுடன் தான்
என்ன ஆகுவான்"

இந்த வரிகளில் வரும் வார்த்தைகள் அனைத்தும் ராம் காதலின் தவிப்பில் துயரம் கலக்காமல் வெளிவந்தவையே. இந்திய குடைவரைக் கட்டிடக்கலையின் முன்னோடி ஆக விளங்கும் எல்லோரா சிற்பங்களை இவ்வரிகளில் சேர்த்து சீதாவின் அழகை அற்புதமாக வெளிக்காட்டுகிறார். அதாவது, 'எல்லோரா சிற்பங்கள் அவள் மீது காதல் கொள்ளும் என்றும், உயிரே இல்லாத கல் கூட அவளை கண்டால் காமமுறும் என்றும்' விவரிக்கிறார். அப்படியே அடுத்த வரியில், 'உயிரற்ற கல்லுக்கே இந்த நிலைமை என்றால் உயிருள்ள மானிடன் என் நிலைமை என்ன? என்று ராம் கேட்பது போல் வடிவமைத்துள்ளார்.

'கம்பன் சொல்ல வந்து' பாடலின் அர்த்தம் - சீதா ராமம்...Representative Image

"உடையால் மூடி வைத்தும்
இமைகள் சாத்தி வைத்தும்
அழகால் என்னை கொல்கிறாய்

அருவி கால்கள் கொண்டு
ஓடை இடையென்றாகி
கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்"

இது போதாது நான் இன்னும் சொல்ல வேண்டும் என்று முன்வந்த ராம், "உடையால் மூடி வைத்தும் இமைகள் சாத்தி வைத்தும்.. அழகால் என்னை கொல்கிறாய்.. அருவி கால்கள் கொண்டு, ஓடை இடையென்றாகி கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்" என்று காதலின் வெளிபாட்டை வெளிபடுத்துகிறான். 

"கடலில் மீனாக
நானாக ஆணையிடு
அலைகள் மீதேறி
உன் மார்பில் நீந்தவிடு
பேராழம் கண்டுகொள்ள
ஏழு கோடி ஜென்மம் வேண்டுமே"

சீதா மீது உள்ள காதலின் மூலமே, 'நெஞ்சம் எனும் உன் கடலில் நான் மீனாக ஆணையிடு என்றும், அலைகள் மீது ஏறி உன் மார்பில் என்னை நீந்தவிடு.. உன் பேராழம் கண்டுக்கொள்ள ஏழு கோடி ஜென்மம் வேண்டும்' என்று காதலில் உருகுகிறான் ராம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்