குருபகவானை அதிபதியாகக்கொண்ட நட்சத்திரங்களில் இரண்டாவதாக இருப்பது விசாகம். இந்த நட்சத்திரத்தின் முதல் 3 பாதங்கள் துலாம் ராசியிலும் 4வது பாதம் விருச்சிக ராசியிலும் அமைந்திருக்கும். இப்படிப்பட்ட நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் நீதிக்கும் நேர்மைக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவராக இருப்பீர்கள். எந்தவொரு பாகுபாடும் பார்க்காமல், யார் பக்கம் நியாயம் இருக்கிறதோ அவருக்கு ஆதரவு கொடுப்பீர்கள். இரக்க குணம் என்பது பிறவிலிருந்தே இருக்கும். யாருக்காவும், எந்த காரணத்திற்காகவும், உங்கள் கொள்கைகளில் இருந்து விலகிச் செல்ல மாட்டீர்கள்.
தாய், தந்தையிடம் அன்புக்காட்டுவதில் வல்லவர், அதேபோல் திருமணமான விசாக நட்சத்திரக்காரர்கள் குழந்தைகள், துணையிடம் மிகுந்த பாசமாக இருப்பீர்கள். மற்றவர்கள் சொல்லும் விஷயங்களை அப்படியே ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். எத்தனை பெரிய இழப்புகள் ஏற்பட்டாலும் மனதளவில் சிறிதும் கலக்கம்கொள்ளாத விசாக நட்சத்திரக்காரர்களே உங்களுக்கு உரிய கோவில் எது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
முருகப் பெருமானின் அவதார நட்சத்திரமான விசாக நட்சத்திரக்காரர்களே நீங்கள் செல்ல வேண்டிய ஆலயம் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் பண்மொழி என்ற இடத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு திருமலை முத்துகுமாரசுவாமி திருக்கோயில். வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வருவதன் மூலம் வாழ்வில் பல திருப்பங்கள் நிகழ்வதோடு, செல்வ விருத்தியடையும். 'வி'என்றால் மேலான என்றும், 'சாகம்' என்றால் ஜோதி என்றும் பொருள்படும். அதுமட்டுமல்லாமல், விசாக நட்சத்திரமானது விபவசாகம், விமலசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரணங்களை கொண்டது. இந்த கிரணங்கள் அனைத்தும் இந்த மலையின் மீது விழுவதால் விசாக நட்சத்திரக்காரர்கள் தங்களின் ஆயுள் முழுவதும் இந்த திருத்தலத்திற்கு சென்று வழிபாடு செய்யலாம்.
அருள்மிகு திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் கேரள மாநிலத்தில் எலலியில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் ஒரு சிறிய குன்றில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் குடிக்கொண்டிருக்கும் முருகப் பெருமானை 'திருமலை முருகன்' என்றும், 'திருமலை முத்துகுமாரசுவாமி' என்றும் அழைப்பர். மேலும் இக்கோயிலின் வளாகத்தில் 'திருமலை அம்மன்' சன்னதியும் உள்ளது.
இந்த மலைக்கோயிலை சுற்றிலும் ஏராளமான தென்னந்தோப்புகள், சின்ன கிராமங்கள் சூழ்ந்துள்ளதால், மலை உச்சியில் இருந்து பார்க்கும்போது அவ்வளவு அற்புதமாக இருக்கும். முன் காலத்தில் இந்த திருமலைக்கோயிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. அங்கு, பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் வேலுக்கு அபிஷேகம், பூஜைகளை மேற்கொண்டு வந்தார். அப்போது, முருகப் பெருமான் பூவன்பட்டர் கனவில் வந்து, 'கோட்டைத்திரடு என்ற இடத்தில் நான் சிலை வடிவில் இருக்கிறேன், அங்கு சென்று ஒரு குழியை தோண்டி பாருங்கள் சிலை ஒன்று இருக்கும், அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்ட செய்து வழிபட வேண்டும்' என்று கூறினார்.
அவ்வாறே, சிலையை எடுத்துவந்து பிரதிஷ்டை செய்து இன்று வரை வழிபாடு செய்து வருகின்றனர். மலை உச்சியில் உள்ள கோயிலின் தீர்த்தத்தை அஷ்டபத்ம குளம் என்று அழைத்தனர், தற்போது இந்த குளத்திற்கு 'பூஞ்சுனை' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிவாலயங்களில் மட்டுமே இருக்கும் சப்தகன்னியர் சிலை, இந்த முருகன் திருத்தலத்தில் உள்ள தீர்த்தக்கரையில் இடம்பெற்றுள்ளனர், இது இக்கோயிலின் மற்றொரு சிறப்பு.
மேலும், இந்த திருமலை முத்துக்குமாரசுவாமி கோயிலில் சித்திரை முதல் தேதி படித்திருவிழா, வைகாசி விசாகம், கந்த சஷ்டி, கார்த்திகையில் தெப்பம், தைப்பூசம் போன்றவை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். வேண்டியதையெல்லாம் கொடுக்கும் அருள்கடவுளாக விளங்கும் இக்கோயிலின் மூலவருக்கு 'மூக்கன்' என்ற பெயரும் உண்டு.
திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி தாலுக்காவில் செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் 5 கிலோ மீட்டர் தொலைவில் 'பண்மொழி' என்ற இடத்தில் ஒரு மலையின் மீது கம்பீரமாக கோயில் கொண்டிருக்கிறார் திருமலை முத்துக்குமாரசுவாமி. இக்கோயில் அமைந்துள்ள திருமலை 500 அடி உயரமுடையது. 544 படிகள் ஏறி தான் சன்னதியை அடைய வேண்டும். இம்மலையை திரிகூடமலை என்றும் அழைப்பர்.
மலைப்பாதையின் தொடக்கத்தில் வல்லபை விநாயகர் சன்னதி இருக்கும். அதேபோல், மலை உச்சியில் ஒரு உச்சிப்பிள்ளையார் சன்னதியும் உள்ளது. 16 படிகள் ஏறி இந்த உச்சிப்பிள்ளையாரை தரிசிப்போருக்கு பதினாரு செல்வமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கோயில் நேரம்: காலை 06.00 - மதியம் 01.00 மணி வரை, மாலை 05.00 - இரவு 08.30 மணி வரை திறந்திருக்கும்.
தொடர்புக்கு: 91 4633- 237 131
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…