பொதுவாக புரட்டாசி மாதம் வந்தாலே, இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்றும், இதனை மறந்தும் செய்யக் கூடாது என்றும் சொல்லக் கூடிய ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அந்த வகையில், என்னென்ன விஷயங்களை இந்த புரட்டாசி மாதத்தில் செய்யலாம் என்றும், செய்யக் கூடாது என்பதைப் பற்றியும் இதில் காணலாம்.
இந்த புரட்டாசி மாதத்தில் சுப காரியங்கள் நடத்தலாமா.? அதாவது வளைகாப்பு நடத்துதல், வீடு மாற்றுதல், திருமண நிகழ்வு உள்ளிட்டவற்றை புரட்டாசி மாதத்தில் செய்யலாமா என்று பலருக்கும் சந்தேகம் எழும். இது குறித்து முழுமையான தகவல்களை இதில் காணலாம்.
புரட்டாசி மாதத்தில் குழந்தைகளுக்கு காது குத்துதல் மற்றும் மொட்டை அடிக்கலாமா?
புரட்டாசி மாதத்தில் காது குத்தலாமா..? மொட்டை அடிக்கலாமா.? என்று சில பேர் குழப்பத்தில் இருப்பர். இது குறித்து ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி கூறுகையில், புரட்டாசி மாதத்தில் குழந்தைகளுக்கு காது குத்துதல், மொட்டை அடித்தல் உள்ளிட்டவற்றைத் தாராளமாகச் செய்யலாம்.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதாவது, இரண்டு மாதங்கள், நான்கு மாதங்கள், ஒரு வருடம் என ஒரு வழிமுறையைக் கையாள்வர். அந்த வகையில், நீங்கள் தாராளமாக புரட்டாசி மாதத்தில் மொட்டை அடித்து காது குத்தலாம்.
பொதுவாக, பெண்களுக்கு 7 அல்லது 9 ஆவது மாதங்களில் வளைகாப்பு நடத்தப்படும். இந்த மாதத்தை விட்டு விட்டால், இரட்டைப் படை மாதமாக போய்விடும். இரட்டைப் படை மாதங்களில் வளைகாப்பு செய்ய மாட்டார்கள்.
எனவே, இந்த மாதத்தில் பெண்களுக்கு வளைகாப்பு வைக்க வேண்டும் என விருப்பப்பட்டால் எந்த வித கவலையுமின்றி செய்யலாம். புரட்டாசி மாதத்தில், வளைகாப்பு செய்வதால், எந்த பிரச்சனையும் ஏற்படாது.
புரட்டாசி மாதத்தில் புதிதாக கடை திறப்பது, வியாபாரம் செய்வது, தொழில் செய்வது உள்ளிட்ட எந்த காரியமாக இருந்தாலும் செய்யலாம். மேலும், கலை சார்ந்த விஷயங்களை செய்யலாம்.
குறிப்பாக, கல்வி சம்பந்தமான விஷயமாக இருந்தாலும், இந்த நாளில் சிறப்பாக தொடங்கலாம். ஏனெனில், இந்த மாதத்தில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி போன்றவை வரும்.
புரட்டாசி மாதத்தில் திருமணம் செய்யலாமா?
புரட்டாசி மாதம் என்றாலே மிகச் சிறப்பான மாதம் ஆகும். இந்த மாதத்தில் திருமண நிகழ்வு நடத்தக் கூடாது எனக் கூறுவர். புரட்டாசி மாதத்திற்கே உரிய பெருமாளை, லட்சுமி தேவியுடன் வணங்கும் இந்த மாதத்தில் ஏன் திருமணம் நடத்தக் கூடாது என்ற கேள்வி எல்லோருக்கும் எழும்.
புரட்டாசி மாதம் என்றாலே மகாளயபட்ச மாதம் என்றே கூறுவர். இந்த மகாலயபட்சம் என்பது 15 நாள்களைக் குறிக்கும். இந்த நாள்களில், முன்னோர்கள் பித்ரு உலகத்திலிருந்து விண்ணுலகத்திற்கு வந்து நாம் கொடுக்கக் கூடிய வழிபாடுகளையும், படையல்களையும் ஏற்றுக் கொண்டு நமக்கு ஆசி வணங்கும் நாளாக அமையும்.
பித்ரு காரியத்தை முடித்த பிறகு சுப காரியங்களைச் செய்ய வேண்டும். பித்ரு காரியமே ஒருவருக்கு முதல் கடமையாகும். பித்ரு கடமையை வைத்துக் கொண்டு வேறு வேறு செயல்களைச் செய்யக் கூடாது. இதன் காரணமாகவே, இந்த புரட்டாசி மாதத்தில் திருமணம் நடத்தக் கூடாது என்று கூறுவர்.
மீதி 15 நாள்கள் உள்ளதே, அந்த சமயத்தில் திருமணம் நடத்தலாமா என்றால், அப்போதும் நடத்தக் கூடாது. ஏனெனில், மகாளயபட்சம் முடிந்த பிறகு நவராத்திரி தொடங்கி விடும். நவராத்திரி நாள்களில் வீட்டில் பூஜை, வழிபாடுகள் மட்டுமே இருக்க வேண்டும். திருமண காரியங்களை நடத்தக் கூடாது.
இந்த புரட்டாசி மாதம் வாஸ்துவிற்கு உண்டான மாதம் அல்ல. இந்த மாதத்தில் வாஸ்து பார்க்க முடியாது. மேலும், முன்னரே பார்த்தது போல, இந்த மாதம் முழுவதும் வழிபாட்டு மாதமாக இருப்பதால் வேறு எந்த செயல்களையும் செய்யக் கூடாது. அதன் படி புதிய வீட்டுக்குக் குடிபெயர்தல், புதிதாக வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்தல் போன்றவை இந்த புரட்டாசி மாதத்தில் கூடாது.
வீடு கட்டுதல், புதிதாக வீடு கட்டுவதில் உள்ள வேலைகள் உள்ளிட்டவற்றை தாராளமாகச் செய்யலாம். அதே போல், முன்னரே ஒரு வீட்டில் பால் காய்ச்சி, அங்கு சமைத்து சாப்பிட்டு விட்டு குடிபெயர்வது மட்டும் இந்த புரட்டாசி மாதத்தில் செய்ய நினைப்பவர்கள், குடிபெயரலாம். அதாவது, குறிப்பாக புதிதாக ஒரு காரியத்தைச் செய்யக் கூடாது.
இந்த புரட்டாசி மாதத்தில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி பார்த்தோம்.. இதில் குறிப்பிட்டுள்ளவற்றை பின்பற்றுவது, ஆன்மீக ரீதியாகவும், மன ரீதியாகவும் நல்லது எனக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…