Thu ,Jul 25, 2024

சென்செக்ஸ் 80,148.88
-280.16sensex(-0.35%)
நிஃப்டி24,413.50
-65.55sensex(-0.27%)
USD
81.57
Exclusive

Indian Politics 2022 | 2022 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் அரங்கேறிய பரபரப்பு சம்பவங்கள்..

Nandhinipriya Ganeshan Updated:
Indian Politics 2022 | 2022 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் அரங்கேறிய பரபரப்பு சம்பவங்கள்..Representative Image.

ஒவ்வொரு ஆண்டு முடியும்போதும் அந்த ஆண்டில் என்ன நடந்து என்பதை திரும்பி பார்ப்பதில் உண்மையில் ஒரு சுவாரஸ்யம் இருக்க தான் செய்கிறது. அந்தவகையில், 2022 ஆம் ஆண்டில் இந்திய அரசியலில் சட்டமன்ற தேர்தல்கள், ஆட்சி மாற்றம், ஆட்சி கவிழ்ப்பு, புதிய தலைவர், தடை செய்யப்பட்ட அமைப்புகள், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு ஆளான முதல்வர், முன்னாள் முதல்வரின் மறைவு என இப்படி ஏராளமான சூடான பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இந்திய அரசியல் 2022 ஒரு பார்வை என்ற தலைப்பில் பார்க்கலாம் வாங்க!

Indian Politics 2022 | 2022 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் அரங்கேறிய பரபரப்பு சம்பவங்கள்..Representative Image

5 மாநில சட்டமன்ற தேர்தல்

மணிப்பூர், உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த பிப்ரவரி - மார்ச் மாதங்களில் தேர்தல் நடைபெற்றது. 5 மாநிலங்களையும் தன்வசப்படுத்த நினைத்த பாஜக மாஸ் வெற்றியை பெற்றது. உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக கூட்டணி 273, சமாஜ்வாதி கூட்டணி 125, காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றார். அதேபோல், உத்தரகாண்டில் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 47, காங்கிரஸ் 19, பகுஜன் சமாஜ் 2, சுயேட்சைகள் 2 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைத்தது. 

மணிப்பூரில் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 32, காங்கிரஸ் 5, ஐக்கிய ஜனதா தள் 6 தொகுதியில் என வெற்றி வாகை சூடின. கோவா மாநிலத்தில் 40 தொகுதிகளில் பாஜக 20, காங்கிரஸ் 11, கோவா பார்வர்ட் கட்சி 1 ஆகிய தொகுதியில் வென்றனர்.  இங்கும் பாஜகவே மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. அதேபோல், பஞ்சாபில் 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளில் வென்று முதல்முறை ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.

Indian Politics 2022 | 2022 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் அரங்கேறிய பரபரப்பு சம்பவங்கள்..Representative Image

கைமாறிய சிவசேனா - மகாராஷ்டிரா

ஆளும் சிவசேனா கட்சியில் எம்.எல்.ஏ ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி ஏற்பட்டு, எம்.எல்.ஏக்கள் திடீரென வெளியேறி பாஜக உடன் கைகோர்த்துக் கொண்டனர். முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும் பதவியேற்க உத்தவ் தாக்கரே தரப்பு ஆட்டம் கண்டது. அதன்பிறகு, தேர்தல் ஆணைய முறையீடு, வழக்குகள், தேர்தல் போட்டி என பல சம்பவங்கள் அரங்கேறி வந்தன. குறிப்பாக, அந்தேரி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின் போது கட்சியின் சின்னம், பெயர் முடக்கப்பட்டன. இதனால், தேர்தல் ஆணையம் அளித்த தற்காலிக சின்னம் மற்றும் பெயருடன்  உத்தவ் தாக்கரே சிவசேனா, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா தேர்தல் களம் கண்டன. இதில் உத்தவ் தாக்கரே சார்பில் நிறுத்தப்பட்ட ருதுஜா லத்கே வெற்றியை தன்வசப்படுத்தினார். 

Indian Politics 2022 | 2022 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் அரங்கேறிய பரபரப்பு சம்பவங்கள்..Representative Image

இந்தியாவின் முதல் பழங்குடி பெண் ஜனாதிபதி

ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் நிறைவடைந்ததையடுத்து, புதிய குடியரசு தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தான் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின வகுப்பை சேர்ந்த திரவுபதி முர்முவை மத்திய பாஜக கூட்டணி பரிந்துரை செய்தது. ஆரம்பத்தில் அரசு ஊழியராக இருந்த இவர், கவுன்சிலராக தனது அரசியல் வாழ்வை தொடங்கினார். மேலும், ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினராக 2 முறை பதவி வகித்தார். பிஜி ஜனதா தள் கூட்டணி ஆட்சியில் பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக (2015-2021) பதவி வகித்து ஓய்வு பெற்ற நிலையில், கடந்த ஜூலை 25 ஆம் தேதி 2022, இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக பதவியேற்றார். இந்தியாவின் முதல் பழங்குடி பெண் ஜனாதிபதி என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. 

Indian Politics 2022 | 2022 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் அரங்கேறிய பரபரப்பு சம்பவங்கள்..Representative Image

கூட்டணி மாற்றம் - பீகார்

2020 சட்டமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்டு, பெரிய கட்சியாக உருவெடுத்து பாஜக அதிர்ச்சியளித்தது. இருப்பினும், முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றார். 2 ஆண்டுகள் ஆட்சி நீடித்த நிலையில், தனது கட்சியை பலவீனப்படுத்து தனக்கு எதிராக பாஜக சதி செய்வதாக கூறி நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து வெளியேறினார். கடந்த ஆகஸ்ட்டில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆதரவுடன் மீண்டும் முதல்வராக ஆட்சிக் கட்டிலை பிடித்தார் நிதிஷ் குமார். மேலும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவி பதவியேற்றுக் கொண்டார். 

Indian Politics 2022 | 2022 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் அரங்கேறிய பரபரப்பு சம்பவங்கள்..Representative Image

நம்பிக்கை வாக்கெடுப்பு - ஜார்கண்ட்

முதல்வர் ஹேமந்த சோரன் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி புகார் எழுந்ததையடுத்து, பாஜக அவரை தகுதி நீக்கம் செய்யக்கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. இந்த விவகாரத்தில் ஹேமந்த் சோரனை எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததாக கூறப்பட்டது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஈடுபட்டது. மொத்தம் உள்ள 81 எம்.எல்.ஏக்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30, பாஜக 26, காங்கிரஸ் 18, ராஷ்டிரிய ஜனதா தளம் 1 என எம்.எல்.ஏக்களை கொண்டிருந்தனர். இதில் 48 எம்.எல்.ஏக்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் ஆட்சி தப்பியது. 

Indian Politics 2022 | 2022 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் அரங்கேறிய பரபரப்பு சம்பவங்கள்..Representative Image

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம்

இந்திய நாட்டின் எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதால், வருகின்ற 2024 மக்களவை தேர்தலுக்குள் எழுச்சி காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கியிருக்கிறார் ராகுல் காந்தி. கடந்த செப்டம் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய நடைபயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் வழியாக ராஜஸ்தான் மாநிலத்தை அடைந்துள்ளது. 

வருகின்ற பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீரில் இந்த ஒற்றுமை பயணம் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தில் ஏராளமானோர் பங்கேற்று வருகின்றனர். இத்தகைய எழுச்சி பயணம் மக்களவை தேர்தலில் எப்படியாபட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

Indian Politics 2022 | 2022 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் அரங்கேறிய பரபரப்பு சம்பவங்கள்..Representative Image

பி.எஃப்.ஐ அமைப்புக்குத் தடை

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா (PFI) என்ற இஸ்லாமிய அமைப்பு இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் திட்டம், அதற்கான நிதியுதவி அளித்தல், தாக்குதலுக்கு பயிற்சி, ஆள் சேர்த்தல் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 15 மாநிலங்களில் என்.ஐ.ஏ சோதனையில் இறங்கியது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். 

இந்தநிலையில், தமிழ்நாடு, கேரளாவில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் அரங்கேற மீண்டும் சோதனை நடைபெற்றது. இந்த விஷயம் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு கட்சிகளும் குரல் எழுப்ப தொடங்கினர். இந்நிலையில் செப்டம்பர் 28ஆம் தேதி பி.எஃப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்ட விரோத அமைப்புகள் என்று அறிவித்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

Indian Politics 2022 | 2022 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் அரங்கேறிய பரபரப்பு சம்பவங்கள்..Representative Image

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது அகில இந்திய காங்கிரச் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போதிலிருந்து கட்சிக்கு சரியான தலைமையில்லாமல், சலசலப்பு நீடித்தது. காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பு, கட்சியில் இருந்து வெளியேறுதல், ஜி-23 தலைவர்களின் அதிருப்தி என அடுத்தடுத்து பரபரப்பு சம்பங்கள் அரங்கேறிய வண்ணம் இருந்தன். அந்தவகையில், கடந்த மே மாதம் மூத்த தலைவர் கபில் சிபலும், ஆகஸ்ட் மாதம் குலாப் நபி ஆசாத்தும் காங்கிரஸில் இருந்து வெளியேறினார்கள். 

மீண்டும் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க ராகுல்காந்தி மறுப்பு தெரிவித்த நிலையில், தேர்தல் மூலம்  புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் என தரப்பு போட்டியிட்ட நிலையில், 7,897 வாக்குகள் பெற்று கார்கே வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்த அக்டோபர் 26ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.

Indian Politics 2022 | 2022 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் அரங்கேறிய பரபரப்பு சம்பவங்கள்..Representative Image

முன்னாள் முதல்வரின் மரணம் - உத்திர பிரதேசம்

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவ் இதுவரை தேர்தல் அரசியலில் 10 முறை எம்.எல்.ஏவாகவும், 7 முறை எம்.பியாகவும், 3 முறை உத்தரப் பிரதேச மாநில முதல்வராக பொறுப்பு வகித்தார். கட்சியினரால் ’நேதாஜி’ என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த இவர், 1996-1998 காலகட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 10ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். 

Indian Politics 2022 | 2022 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் அரங்கேறிய பரபரப்பு சம்பவங்கள்..Representative Image

துணை முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை - டெல்லி

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவாலும், துணை முதல்வராக மணீஷ் சிசோடியாவும் இருக்கிறார்கள். இதில் மணீஷ் சிசோடியா வீட்டில் மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிரடி சோதனை நடத்திய நிலையில், மணீஷ் சிசோடியா நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்